சில கச்சேரிகளில் சரியான காலப்ரமாணமும், நிதானமான நடையும் ஆரம்பத்திலேயே அமைந்துவிடும். இறுதி வரை தொடரும் அந்த அனுபவம், ஆனந்தமாக இருக்கும். காயத்ரி கிரீஷ் அளித்த, 90 நிமிட நிகழ்ச்சி அப்படித் தான் இருந்தது.'ஸரஸிஜநாப...' எனத் துவங்கும் காம்போதி ராக, அட தாள வர்ணத்தை இரண்டு காலங்களில் பாடி, ஒரு வலுவான அஸ்திவாரத்தை அமைத்துக்கொண்டார் காயத்ரி.
அடுத்து வந்தது, அதே நிதானத்தில், தியாகராஜரின் வஸந்த பைரவி ராகக் கீர்த்தனை. இதில் ஸ்வரக் கற்பனைகளை மத்யம காலத்தில் தெளித்து விட்டாற்போல் பளிச்சென்று பாடினார். பின், சற்றே விஸ்தாரமான ஆபோகி ராக ஆலாபனையைத் தொடர்ந்து, அதிகம் கேட்டிராத 'ஸ்ரீ சிவே...' என்ற ஹரிகேசநல்லுார் முத்தையா பாகவதர் பாடலை எடுத்துக் கொண்டார். ராகத்தையும் பாடலையும் எச்சரிக்கையுடன் லாவகமாகக் கையாண்டார். அடுத்து, பேகட ராகத்தை சிறு அறிமுகமாகக் காட்டிவிட்டு, ராமசுவாமி சிவனின் தமிழ்ப் பாட்டை வழங்கினார்.
'கடைக்கண் வைத்தென்னை ஆளம்மா...' என்ற அழகான பாடலில், நன்றாகக் காலுான்றி செட்டில் ஆனார் காயத்ரி. இரு வேறு வேகங்களில் அமைந்த பாடல் வரிகள் மிக அழகானவை. இதனால், ஸ்வரங்கள் பாடாமல் கீர்த்தனையை மட்டும் அளித்தது, அவரது தெளிவான புரிதலை வெளிப்படுத்தியது. மிஸ்ர சாபு தாளத்தில் மெதுவான கதியில் அமைந்த இந்தப் பாட்டிற்கு, மிருதங்கமும் கடமும் மிருதுவாக அரவணைத்துச் சென்றது சுகம். காயத்ரி மையமாக எடுத்துப் பாடியது, சிம்மேந்திரமத்யமம்.
ராக ஆலாபனையில் படிப்படியாக மெருகேற்றினார். 'ராம ராம குண சீமா...' என்ற, மஹாராஜா ஸ்வாதிதிருநாள் இயற்றிய கீர்த்தனை, அதில் வழக்கமான, 'முனி மானஸ...' என்ற சரண வரிகளில் நெரவல். அழுத்தமான சங்கதிகளாலும் கற்பனை ஸ்வரங்களை உருண்டோடவிட்டு, சரியான இடத்தில் கொண்டு வந்து நிறுத்திய விதத்திலும், 'ஏ' கிரேடு மதிப்பெண்களை அள்ளிக் கொண்டார்.வயலின் கலைஞர் எம்.ஏ.கிருஷ்ணசுவாமி ஆபோகி ராக ஆலாபனையிலும், விரிவான சிம்மேந்திரமத்யமத்திலும் தன் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார். பாடல்களில், காயத்ரியின் கற்பனைக்கு ஏற்றாற்போல அவருக்கு உறுதுணையாக வாசித்தார்.இதர உருப்படிகளாக காயத்ரி கிரிஷ் பாடியவை, 'கருணைக் கடலென்று உன்னை காதிற் கேட்டு நம்பி வந்தேன்...' என்ற உணர்ச்சிப் பூர்வமான வரிகள் கொண்ட, கோபாலகிருஷ்ண பாரதியின் பெஹாக் ராக, 'இரக்கம் வராமல் போனதென்ன காரணம்...' என்னும் கீர்த்தனையும், சிந்து பைரவியில் புரந்தர தாஸரின், 'தம்பூரி மீட்டிதவ...' என்ற விறுவிறுப்பான பதமும்.தனியாவர்த்தனத்தில் பூங்குளம்சுப்ரமணியம் மிருதங்கத்தில், பல அழகான சொற்களை அனாயசமாக வாசித்தார்.
கடம் வாசித்த எச்.பிரசன்னாவும் தன் பங்களிப்பை சிறப்பாகவே வழங்கினார்.காயத்ரி கிரீஷ், 'சிவனின் எண்ணற்ற படிவங்கள்' எனும் ஒரு கருப்பொருள் மீதான, 'மல்டி மீடியா' தயாரிப்பு ஒன்றை, புது டில்லி கலாசார அமைச்சகத்தின் உதவியுடன் ஆக்கபூர்வமாக சிந்தித்து செயல்பட்டு விளக்கக்காட்சிகளுடன், பிப்., 2013 முதல் மார்ச் 2014 வரை தொடர் நிகழ்வுகளாக சென்னையில் அளித்ததை, ரசிகர்கள் கண்டு வியந்து ஆனந்தித்ததை, இங்கு கட்டாயம் நினைவு படுத்த வேண்டும்.- எஸ்.சிவகுமார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE