கோவை:சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு, சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை, கணினிமயமாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.கோவை மாவட்டத்தில், 10 சட்டமன்ற தொகுதிகளில், வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில், 29 லட்சத்து 97 ஆயிரத்து 733 பேர் இடம் பெற்று இருந்தனர்.தொடர்ந்து கடந்த, 15ம் தேதி வரை, பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சிறப்பு முகாம்களின் இறுதியில், 1,70,419 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்து இருந்தனர்.இவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும், கணினிமயமாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 979 ஓட்டு சாவடி மையங்களிலுள்ள, 3,048 ஓட்டு சாவடிகளும் ஆய்வு செய்யப்பட்டு, ஒரே மையங்களில் அதிக ஓட்டு சாவடிகள் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது தொடர்பான ஆலோசனைகளும் நடந்து வருகின்றன.தவிர, மக்கள் தொகை விகிதம் அடிப்படையில் வேறுபாடுகள் உள்ள தொகுதிகளில், அதன் குறைபாடுகளை களைய, தேர்தல் பிரிவு அலுவலர்கள் கள ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ' மாநில தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி, வரும் 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE