சென்னை:'விதிமுறைகள் மற்றும் கட்டண விபரங்களை, தெளிவான முறையில் அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும்' என, சார் - பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், பத்திரப்பதிவு பணிகள் அனைத்தும், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்காக, பத்திரப்பதிவு கட்டணங்கள், முத்திரைத்தீர்வை, விதிமுறைகள் போன்றவை, பதிவுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த விபரங்களை, ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகத்திலும், பொதுமக்கள் அறியும் வகையில், அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும்.
ஆனால், பெரும்பாலான அலுவலகங்களில், இந்த அறிவிப்பு பலகைகள் தெளிவாக இல்லை. விதிமுறை மற்றும் கட்டண விபரங்கள், சிறிய எழுத்துகளில் இருப்பதால், பொது மக்களால் படித்து அறிய முடிவதில்லை.இது தொடர்பாக, பதிவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: அறிவிப்பு பலகை தொடர்பான புகார்கள், தலைமை அலுவலகத்துக்கு வந்துள்ளன. கட்டண விபரங்களை தெளிவான முறையில், அறிவிப்பு பலகைகளில் இடம்பெற செய்ய வேண்டும்.
இது குறித்த அறிவுறுத்தல்கள், மாவட்ட பதிவாளர்கள் வாயிலாக, சார் - பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இதன் பின்னும், சரி செய்யாத சார் - பதிவாளர்கள் மீது, மாவட்ட பதிவாளர்கள் நடவடிக்கை எடுப்பர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE