கோவை:கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் பரமேஸ்வரன் பாளையத்தில், கொங்கு திருப்பதி கோவில் எதிரே உள்ள மைதானத்தில், கருடாழ்வார், 'ஆசிர்வதிக்க' ஆலமரத்தடியில் பஞ்சு மெத்தையில் அமர்ந்து, ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்தினார்.
ஹிந்துக்களுக்கு எதிராக பேசி வரும் தி.மு.க.,வினர், கோவில் மைதானத்தில் ஏன் கூட்டம் நடத்த வேண்டும் என, பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணியினர், ஆரம்பத்திலேயே எதிர்த்தனர். கூட்டம் நடத்தக்கூடாது என, போலீசில் பல தரப்பிலும் புகார் செய்யப்பட்டது; போலீசாரும் அனுமதி மறுத்தனர்.இருப்பினும், தடையை மீறி, கூட்டம் நடத்தப்பட்டது.மைதானத்தில், மக்கள் அமர, தெற்கு வடக்காக கூடாரம் அமைத்து, கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.
கோவில் சுற்றுச்சுவரில், கருடாழ்வார் சிற்பம் உள்ள இடத்துக்கு நேராக, ஆலமரத்தடியில், வடக்கு திசை பார்த்து, ஸ்டாலின் அமர இடம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. சுமைதாங்கி கல் மீது, பஞ்சு மெத்தை போடப்பட்டு, ஜமுக்காளம் விரித்து, மறைப்பு ஏற்படுத்தியிருந்தனர். அதில், ஜம்மென்று, கால்களை மடக்கி அமர்ந்து, கிராம சபை கூட்டத்தை ஸ்டாலின் நடத்தினார்.
பெண்கள் அமர்ந்திருந்த கூடாரத்தை, ஆலமரம் வரை நீட்டித்திருக்க முடியும். அவ்வாறு செய்திருந்தால், கருடாழ்வார் நேரடியாக ஆசிர்வாதம் செய்வது போல, அமர முடியாது. அதனால், ஸ்டாலின் அமர்ந்த இடம் வரை கூடாரம் போடுவதை தவிர்த்திருந்தனர்.
ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி, ஆலமரத்தடிக்கு வரும் வரை, சிவப்பு கம்பளம் விரித்து, தனிப்பாதை ஏற்படுத்தியிருந்தனர். சிவப்பு கம்பளம் மீது வேறு யாரும் நடந்து செல்லக்கூடாது என, கட்சியினர் தடை விதித்தனர். பெண்கள் தரையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை சுற்றிலும், ஆண்கள் இருக்கையில் உட்கார்ந்திருந்தனர்.
பார்வை ஏன்?
ஆன்மிக பெரியோர்கள் கூறுகையில், 'கருடாழ்வார், பெருமாளின் வாகனம். அவரது பார்வை பட்டால், சரீரத்துக்கு நோய் பாதிப்பு வராது. நல்லது நடக்கும்; வாழ்வில் உயர்வு, வெற்றி கிடைக்கும்' என்றனர்.
பலுான் கழற்ற உத்தரவு
தேவராயபுரம் ஊராட்சி மட்டுமின்றி, கோவையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கட்சியினர் அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களுக்கு, கறுப்பு, சிவப்பு நிறத்தில் தொப்பி வழங்கப்பட்டது. அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, நான்கு பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.கட்சியில் இணைவதற்கு, ஒரு தொலைபேசி எண் குறிப்பிட்டு, ஸ்டாலின் படத்துடன், சட்டை பையில் வைக்கும் அளவிற்கு, சிறிய காலண்டர் வழங்கினர்.ஏழு இடங்களில், கறுப்பு, சிவப்பு நிறத்திலும், இரு இடங்களில், பச்சை நிறத்திலும் பலுான் வளையம் அமைக்கப்பட்டிருந்தன. சாலையின் இருபுறமும் கட்சிக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
ஸ்டாலின் பேசுகையில், ''அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஒரு விழாவுக்கு சென்றிருந்த போது, கத்திரிக்கோலால் பலுான்களை வெடிக்க வைப்பது போல், 'வாட்ஸ் ஆப்'பில் வீடியோ வந்தது. ஒரு அமைச்சர் இப்படி செய்யலாமா? கேவலம்! பலுான்களை இரவோடு இரவாக கழற்றி விடுங்கள்,'' என்றார்.
யார் அந்த பெண்?
மக்கள் கிராம சபை கூட்டத்தில், ஸ்டாலினிடம்கேள்வி கேட்ட பெண் பெயர் பூங்கொடி என தெரிய வந்தது.இவர், அ.தி.மு.க., தெற்கு மாவட்ட மகளிர் அணி துணை தலைவராக இருக்கிறார். கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பூங்கொடியை, போலீசார் பாதுகாப்பாக வாகனத்துக்கு அழைத்து சென்றனர். தி.மு.க., தொண்டர்கள் தொடர்ந்து துரத்தி வந்து பூங்கொடியை தாக்கினர். அவரை அழைத்து சென்ற பெண் காவலர் உள்ளிட்ட போலீசாரையும் தி.மு.க.,வினர் தாக்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE