புதுடில்லி: பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் வரைவு சட்டங்களை தாக்கல் செய்வதற்கு, 60 நாட்களுக்கு முன், அவற்றை அரசின் இணையதளங்களில் வெளியிட்டு, மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடைமுறையை உருவாக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பா.ஜ.,வைச் சேர்ந்த, அஸ்வினி குமார் உபாத்யாய் என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில், பொது நலன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது:சட்டங்கள் தொடர்பாக, துறை அதிகாரிகள் வரைவு தயாரிக்கின்றனர். அதிகாரிகள் இடையே ஆலோசனை நடத்தப்படுகிறது. பார்லிமென்ட் அல்லது சட்டசபையில் அவை தாக்கல் செய்யப்படும்போது தான், அது குறித்து பொது மக்களுக்கும், அந்த வரைவு சட்டத்துக்கு தொடர்புடையவர்களுக்கு தெரிய வருகிறது. அதனால், அவர்களால் கருத்து தெரிவிக்க முடிவதில்லை.
சமீபத்தில் மூன்று வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அதை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். சிலர் அரசியல் காரணங்களுக்காக, பொய் தகவல்களை கூறி, போராட்டத்தை துாண்டி விட்டுள்ளனர். அதனால், அந்தச் சட்டம் அமல்படுத்தியதன் நோக்கம் நிறைவேறவில்லை.இதை தவிர்க்க, பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் வரைவு சட்டம் தாக்கல் செய்வதற்கு, 60 நாட்களுக்கு முன், அதை அரசின் இணையதளங்களில் வெளியிட வேண்டும்.

பல்வேறு பிராந்திய மொழிகளிலும் அவை இருக்க வேண்டும். அதன் வாயிலாக கருத்து தெரிவிக்க, மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். தற்போதுள்ள பல்வேறு ஊடக வசதிகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளில், இது சாத்தியம். மேலும், சட்டங்கள் அமல்படுத்துவதில், ஜனநாயக வாய்ப்பும் கிடைக்கும். அதனால், முன்னதாகவே,வரைவு சட்டங்களை விளம்பரப்படுத்த, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE