சென்னை:''சிறுபான்மையின மக்களுக்கு, பா.ஜ., எதிரானது என, தவறான பிரசாரம் செய்கின்றனர். இது, வரும் தேர்தலில் ஈடுபடாது,'' என, பா.ஜ.,வை சேர்ந்த, நடிகை குஷ்பு தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:பா.ஜ., கூட்டணியில், அ.தி.மு.க.,வும்; அ.தி.மு.க., கூட்டணி யில், பா.ஜ.,வும் உள்ளன. மூக்கை நேரடியாக தொட்டாலும், சுற்றி வளைத்து தொட்டாலும் ஒன்று தான். 'அ.தி.மு.க.,வுடன் தான் கூட்டணி' என, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை வந்தபோது, 'பா.ஜ., கூட்டணி தொடரும்' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது என்பது, ஒரு மரபு. அதைத் தான் கூறினோம். முதல்வராக இ.பி.எஸ்.,சை ஏற்றுள்ளோம்; இதில், சந்தேகம் தேவையில்லை. தேர்தல் கூட்டணி அறிவிக்கும் போது, முதல்வர் வேட்பாளரை அறிவிப்போம். அ.தி.மு.க., கூட்டணியில் உள்ளோம். ஒரு சில நாட்களில், முழு விபரம் அறிவிக்கப்படும்.
முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்.,சை ஏற்க வில்லை என, யாரும் கூறவில்லை. பா.ஜ., சார்பில், யாரிடமும் ஆதரவு கேட்கவில்லை. யார் வேண்டுமானாலும், ஆதரவு கொடுக்கலாம். பா.ஜ.,வுக்கு ஆதரவு கொடுக்கலாமா என்பதை, ரஜினி தான் முடிவு செய்ய வேண்டும். பா.ஜ., தலைமை, எங்கு போட்டியிட சொன்னாலும் போட்டியிடுவேன். சிறுபான்மையின மக்களுக்கு எதிரானது என, பா.ஜ., பற்றி தவறாக பிரசாரம் செய்கின்றனர்.
வரும் தேர்தலில், இது எடுபடாது. எனக்கு எதிராக தேர்தலில் நிற்க, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி தயாரா என்பதை, அவரிடம் தான் கேட்க வேண்டும்.இவ்வாறு, குஷ்பு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE