புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில், பொங்கல் பானை தயாரிப்பு பணி மும்முரமாகி உள்ளது. தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் விழாவின் போது, புது பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்படும்.
இதற்காக, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே துவரடிமனை, மழையூர், கொசலக்குடி, அறந்தாங்கி ஆகிய பகுதியில் பொங்கல் பானை, கலயம், மண் சட்டி, அடுப்பு ஆகியவை தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இது குறித்து, மண்பாண்டம் உற்பத்தி செய்யும் நாகலிங்கம், 66, என்பவர் கூறியதாவது:பல தலைமுறைகளாக, மண்பாண்டங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். பிளாஸ்டிக் பொருட்கள் தடையால், மண்பாண்டங்கள் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.இங்கு, பல தலைமுறைகளாக, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், இத்தொழிலை செய்து வருகின்றனர்.
துவரடிமனை, மழையூர், கொசலக்குடி பகுதிகளில் தயாரிக்கும் பொங்கல் பானைகள், வெளி மாவட்டங்களுக்கு மட்டுமின்றி, வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. பானைகள் தயாரிப்புக்கான மண் கிடைப்பதில்லை. இந்த தொழிலை ஊக்குவிக்கும் விதமாக, மண் எடுப்பதற்கு, அரசு முறையான அனுமதியை வழங்க வேண்டும்.
மண் பானைகள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெரிய பானை, 100 ரூபாய்க்கும், சிறிய பானை, மண் சட்டி, கலயம் போன்றவை, 50 ரூபாய்க்கும், அடுப்பு, 200 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம். உள்ளூர் தவிர வெளியூர் மக்களும் மண் பானையை ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE