சென்னை:சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் பிரசாரங்களில், மின்சாரம் திருடப்படுவதை தடுக்க, மின் வாரியம், சிறப்பு குழு அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தமிழக மின் வாரியம், 'டிரான்ஸ்பார்மர்' மற்றும் மின் வினியோக பெட்டி ஆகிய சாதனங்கள் உதவியுடன், மின் வினியோகம் செய்கிறது. அந்த சாதனங்களில், எப்போதும் மின்சாரம் செல்வதால், ஊழியர்களை தவிர, வேறு நபர் தொட அனுமதியில்லை.சட்டசபை தேர்தல், ஏப்., மாதம் நடக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக, தற்போது, அ.தி.மு.க., -- தி.மு.க., மற்றும் அவற்றின் கூட்டணி கட்சியினர், பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கட்சியினர், மூத்த நிர்வாகிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான மேடை, வண்ண விளக்கு அலங்காரத்திற்கான மின்சாரத்தை, மின் சாதனங்களில் இருந்து திருடுகின்றனர்.
இம்மாத இறுதியில் இருந்து, அடுத்த இரு மாதங்களுக்கு, தமிழகம் முழுதும், தேர்தல் பிரசார கூட்டங்கள், நிகழ்ச்சிகள் களைகட்டும். கட்சியினர், மின் திருட்டில் ஈடுபடுவதை தடுக்க, மின் வாரிய அமலாக்க பிரிவினர், முன்னாள் ராணுவ ஊழியர்களுடன், ஒவ்வொரு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், சிறப்பு குழு அமைக்க வேண்டும்.அக்குழு, கட்சி நிகழ்ச்சிகளில், மின் திருட்டு நடக்கிறதா என, தினமும் ஆய்வு செய்ய வேண்டும்.
மின்சாரம் திருடியது கண்டறியப்பட்டால், அதற்கு, தற்காலிக மின் இணைப்பிற்கு வசூலிக்கப்படும், யூனிட், 12 ரூபாய் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், மின் விபத்து ஏற்படாது. மின் வாரியத்தின் வருவாய் இழப்பும் தடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE