கோவை:'கோவை விழா'வின் தொடக்க நிகழ்வாக, கொரோனா காலத்தில் பணியாற்றிய, டாக்டர்கள், நர்ஸ்கள் உள்பட சுகாதார பணியாளர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் துாவி கவுரவிக்கப்பட்டது.
கோவையில் நடைபெறும், 13ம் ஆண்டு கோவை விழாவை, அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் வேலுமணி தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில், கொரோனா காலத்தில் பணியாற்றிய டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டுகள் தெரிவித்தனர். தொடர்ந்து, அனைவரையும் கவுரவிக்கும் விதமாக, மருத்துவமனை வளாகத்துக்கு ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்டு, மலர்கள் துாவப்பட்டன.
மேலும், சுகாதார பணியாளர்கள், டாக்டர்கள், போலீசார் உள்ளிட்டோரை சிறப்பிக்கும் வகையில் வரையப்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.இன்று துடியலுார் கங்கா நர்ஸிங் கல்லுாரியில் இருந்து துாய்மை பணியாளர்கள் ஹெலிகாப்டரில் இலவசமாக அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் 10ம் தேதி வரை, பாரம்பரிய சுற்றுலா, உணவு திருவிழா, மராத்தான், சைக்ளத்தான் உள்ளிட்ட, 100 நிகழ்ச்சிகள் ஆன்லைன் வழியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், இ.எஸ்.ஐ.,டீன் நிர்மலா, அரசு மருத்துவமனை டீன் (பொ) காளிதாஸ், மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE