கோவை:''தி.மு.க., கிராம சபை கூட்டத்துக்கு, அ.தி.மு.க., வினரை நான் அனுப்பவில்லை,'' என்று அமைச்சர் வேலுமணி கூறினார்.
கோவை, தொண்டாமுத்துாரில் தி.மு.க., கிராம சபை கூட்டத்தில், ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பூங்கொடி என்பவரை தி.மு.க.,வினர் தாக்கியதாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்றிரவு அரசு மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் வேலுமணி, பூங்கொடியை சந்தித்து நலம் விசாரித்தார்.
பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க தலைவர் ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் பழமையான கோவிலை மறைத்து, மேடை போட்டு பொதுக்கூட்டம் நடத்தியுள்ளார். கோவிலுக்கு சென்ற பூங்கொடி உள்ளிட்டவர்கள், கூட்டத்துக்கு சென்று கேள்வி கேட்டுள்ளனர். கேள்வி கேட்டால் பதில் சொல்வதற்கு பதிலாக, குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இப்படி தான் நடக்கும்.
இந்த தாக்குதலுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியாக வேண்டும். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க.,வினரை திட்டமிட்டு நான் அனுப்பியதாக கூறுவது தவறானது. அது போன்ற கீழ்தரமான எண்ணம் எனக்கு கிடையாது. பூங்கொடி விடுதலைசிறுத்தைகள் கட்சியிலிருந்து, எங்கள் கட்சியில் இணைந்தவர். அக்கூட்டத்திற்கு சென்றவர்கள், எங்களிடம் தெரிவிக்கவில்லை. இது போன்றதாக்குதல் தொடர்ந்தால் மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு, வேலுமணி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE