புதுடில்லி:பிரிட்டனில் இருந்து வரும் விமானப் பயணியருக்கு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில், மரபணு உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் தென்படத் துவங்கியது. அது பல்வேறு நாடுகளுக்கும் பரவத் துவங்கியது. இதையடுத்து, கடந்தாண்டு, டிச., 23 முதல், பிரிட்டனில் இருந்து வரும் விமான சேவையை நிறுத்தி, மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், மீண்டும், விமான சேவையை துவங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு, வரும், 6ம் தேதியிலிருந்தும், பிரிட்டனிலிருந்து, 8ம் தேதியிலிருந்தும் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. அதே நேரத்தில், பயணியருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள நடைமுறை விதிகளில் கூறப்பட்டுள்ளதாவது:பிரிட்டனில் இருந்து வருவோர், பயணத்துக்கு, 72 மணி நேரத்துக்குள் எடுத்த, கொரோனா தொற்று இல்லை என்ற பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இதை அனைத்து விமான நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும்.வாரத்துக்கு, 30 விமான சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

விமான நிலையங்களில், அனைத்து பயணியருக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும். அதற்கு தேவையான வசதிகளை, அனைத்து மாநிலங்களும் செய்ய வேண்டும். கொரோனா தொற்று இல்லாதவர்கள், 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்.தொற்று உறுதியானவர்கள், தனிமைப்படுத்தப்படுவர். ஒருவருக்கு தொற்று உறுதியானால், அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு முன் மற்றும் பின்னால் உள்ள மூன்று வரிசைகளில் பயணித்த அனைத்து பயணியரும் தனிமைப் படுத்தப்படுவர்.

மரபணு உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று இருந்தால், தனி அறையில் தனிமைப்படுத்தப்படுவர். அவர்களுக்கு, 14 நாட்களுக்குப் பின், பரிசோதனை செய்யப்படும். தொற்று இல்லை என்பது உறுதியானால் மட்டுமே, அங்கிருந்து வெளியேற அனுமதி அளிக்கப்படும்.பரிசோதனை முதல், தனிமைப்படுத்துவது வரையிலான, அனைத்து செலவுகளையும், பயணியர் ஏற்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE