திருப்பூர்;வங்கி கணக்கிலிருந்து தொகையை கபளீகரம் செய்ய, மோசடி ஆசாமிகள் புதிய நுட்பங்களை கையாள துவங்கியுள்ளனர். எனவே, மக்கள் உஷராக இருக்கவேண்டும் என, வங்கியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.''நான், பேங்க் மேனேஜர் பேசறேன். உங்க, டெபிட் கார்டை 'லாக்' பண்ணிட்டோம். மறுபடியும் ஓபன் பண்றதுக்கு, உங்க போனுக்குவந்த, ஓ.டி.பி., நம்பரை சொன்னீங்கன்னா, சரி பண்ணிடுவோம்,' என, நைசாக பேசி, நுாதன முறையில் வங்கி கணக்கிலிருந்து பணத்தை கபளீகரம் செய்துவிடுகின்றனர் மோசடி ஆசாமிகள்.இதுகுறித்து வங்கிகள் தொடர்ந்து வாடிக்கையாளர் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. 'அக்கவுன்ட் எண், டெபிட் கார்டு எண், சி.வி.வி., எண்; ஓ.டி.பி.,யை யாரிடமும் தெரிவிக்க கூடாது. வங்கி அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ளமாட்டார்கள்' என, வங்கிகளிலும், ஏ.டி.எம்., மையங்களிலும், விழிப்புணர்வு போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.இதனால், மக்கள் தற்போது மிகவும் உஷாராக உள்ளனர். வங்கி கணக்கு, டெபிட்கார்டு விவரம் கேட்டு, வலை விரிக்கும் ஆசாமிகளை, சிலர் கலாய்த்துவிடுகின்றனர்; கால் ரெக்கார்டிங் செய்து, சமூக தளங்களில் பகிர்ந்துவிடுகின்றனர்.'இது வேலைக்கு ஆகாது', என்பதால், மோசடி ஆசாமிகள், புதிய 'டெக்னிக்' ஒன்றை கையாள துவங்கி விட்டனர். அது என்னவென்றால், தொழில்நுட்ப உதவியுடன், வங்கியிலிருந்து அனுப்பப்பட்டதுபோலவே, வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்புகின்றனர்.அதில், 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை, வங்கி கணக்கில் கிரெடிட் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மையில் கணக்கில் தொகை ஏதும் அனுப்பப்படுவதில்லை.குறிப்பிட்ட தொகை, வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதா என பரிசோதிப்பதற்குள், 'வாட்ஸ் அப்' எண்ணுக்கு, அவசர மெசேஜ் ஒன்றை அனுப்பி விடுகின்றனர். அதில், 'மருத்துவமனையில் இருக்கும் எனது தாயின் வங்கி கணக்கிற்கு அனுப்பவேண்டிய தொகை, தவறுதலாக உங்கள் வங்கி கணக்கிற்கு வந்துவிட்டது; சிகிச்சைக்கு அவசர தேவை. தயவுகூர்ந்து, உடனே, 'பேடிஎம்' அல்லது கூகுள் மூலம் அனுப்பி வையுங்கள்' என, உருக்கமாக குறிப்பிடுகின்றனர்.இது மோசடி கும்பலின், புதிய டூட் என்பது தெரியாமல், தவறுதலாக தங்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டிருப்பதாக நம்பி, குறிப்பிட்ட எண்ணுக்கு தொகை அனுப்பி, பலரும் ஏமாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.இந்த நவீன மோசடி குறித்து, திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலக்ஸாண்டர் கூறியதாவது:மோசடி ஆசாமிகள், வங்கிகளிலிருந்து பணத்தை சுருட்டிச்செல்ல, புதுப்புது வழிகளை கையாளுகின்றனர். தொடர் விழிப்புணர்வால், டெபிப், கிரெடிட், வங்கி கணக்கு விவரங்களை பயன்படுத்தி, மோசடி செய்வது குறைந்துள்ளது.வங்கி கணக்கில் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக, மெசேஜ் வந்தால், உடனே அவற்றை நம்பிவிடக்கூடாது. நெட்பேங்கிங்; மொபைல் ஆப் மூலம் பரிசோதிக்கவேண்டும். வங்கிக்கு நேரடியாக சென்று; டெபிட் கார்டு மூலமாகவும் பரிசோதிக்கலாம்.பணம் பறிப்பதற்காக, அவசரப்படுத்தினாலும், உருக்கமான மெசேஜ் அனுப்பினாலும், அதையெல்லம் பொருட்படுத்தவே கூடாது. உண்மையிலேயே, உங்கள் கணக்கில் வேறு நபர் தவறாக தொகை அனுப்பியிருந்தாலும்கூட, சுயமாக அவற்றை திருப்பி அனுப்பிவிட கூடாது.கணக்குவைத்துள்ள வங்கியை அணுகி, தகவல் தெரிவிக்கவேண்டும். வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்து, திருப்பி அனுப்புவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வர். இந்த புதிய துவகையான மோசடிகள் குறித்து, வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE