துபாய் : சென்னையைச் சேர்ந்த தமிழரான ராம்குமார் சாரங்கபாணி துபாயில் மிகப் பெரிய வாழ்த்து அட்டை தயாரித்து 'கின்னஸ்' சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
மேற்காசியாவில் ஐக்கிய அரபு எமிரேட்சைச் சேர்ந்த துபாயில் ராம்குமார் சாரங்கபாணி 17 ஆண்டுகளுக்கு முன் குடியேறினார். இவர் மிகப் பெரிய மின்னணு வாழ்த்து அட்டை தயாரிப்பு; மிகச் சிறிய சீட்டுக் கட்டை உருவாக்கியது என பல்வேறு சாதனைகள் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவர் தற்போது துபாய் மன்னராக ஷேக் முகமது பதவியேற்ற 15 வது ஆண்டு விழா ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உருவான 50வது ஆண்டு விழா ஆகியவற்றை
முன்னிட்டு மிகப் பெரிய வாழ்த்து அட்டையை உருவாக்கியுள்ளார்.
இந்த வாழ்த்து அட்டை 4 மீட்டர் நீளம் 2.05 மீட்டர் அகலமுள்ளது. வழக்கமான வாழ்த்து அட்டைகளை விட 100 மடங்கு பெரியது. அதில் ஓவியர் அக்பர் சாஹேப் வரைந்த மன்னர் ஷேக் முகமதுவின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. உறையுடன் கூடிய வாழ்த்து அட்டையின் பரப்பு 8.20 ச.மீ. இதற்கு முன் ஹாங்காங்கில் 6.729 ச.மீ. பரப்பு உடைய வாழ்த்து அட்டை தான் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. இந்த சாதனையை ராம்குமார் சாரங்கபாணி முறியடித்துஉள்ளார்.
இவர் கடந்த ஆறு மாதங்களாக இந்த வாழ்த்து அட்டையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். நாளை தோஹா மையத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சின் தேசிய தின விழா துவங்க உள்ளது. இதில் ராம்குமார் சாரங்கபாணியின் கின்னஸ் வாழ்த்து அட்டை பொதுமக்கள்
பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE