உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
பா.ஸ்ரீராமதேசிகன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ரஜினி, நடிகர் என்பதையும் தாண்டி, அவரிடம் இருக்கும் எளிமையும், நற்பண்பும் பலரை கவர்ந்துள்ளன. 'அரசியலுக்கு வருகிறேன்' என, அவர் அறிவித்ததில் இருந்து, எதிர்ப்பு குரல் எழுப்பும் சிலர், மூன்று கேள்விகளை முன்வைத்தனர். 'ரஜினி தமிழரா, தமிழகத்திற்கு என்ன செய்தார்? 70 வயதில், அரசியலுக்கு ஏன் வர வேண்டும்?' இது தான், அந்தக் கேள்விகள். கடந்த, 2006 டிசம்பரில், அப்போதைய நம் பிரதமர் மன்மோகன் சிங், ஜப்பான் சென்றிருந்தார். அவர், அந்நாட்டு பார்லிமென்டில், 'ரஜினி' எனும் தமிழ் நடிகரின் பெயரை உச்சரித்ததும், அங்கு எழுந்த கைத்தட்டலில், தமிழகமே பெருமிதம் கொண்டது.

கடந்த, 45 ஆண்டுகளாக, இங்கு வாழ்ந்து வரும் ரஜினி, தமிழர் தான். நமக்கு மிகவும் பிடித்த, நற்பண்பு மற்றும் ஆளும் திறன் உடையவர், நம் தலைவர் ஆகலாம். அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இரண்டாவது, தமிழகத்திற்கு அவர் என்ன செய்து இருக்கிறார் என்ற கேள்வி. 'சுனாமி' முதல், 'கஜா' புயல் வரை, அவர் செய்த நிதியுதவி, பொருளுதவி ஏராளம். அவர் விளம்பரப்படுத்திக் கொள்ளாவிட்டாலும், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த நற்காரியங்கள் வெளிவந்துள்ளன. 'அருணாச்சலா அறக்கட்டளை' மூலம், பல மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கியிருக்கிறார். தன், ராகவேந்திரா திருமண மண்டபத்தை, பொதுமக்கள் பெயருக்கு உயில் எழுதி வைத்திருக்கிறார். இதெல்லாம் செய்தபோது, அவர் தனி மனிதர்; முதல்வர் அல்ல என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

வயதைக் காரணம் காட்டி, தற்போது அரசியலில் இருந்து விலகியது தான், சந்தேகத்தைக் கிளப்புகிறது. ஏனெனில், 'அரசியலுக்கு வருவது உறுதி' எனக் கூறிய நாள் முதல், கட்சிப் பணியில் தீவிரம் காட்டியிருக்க வேண்டும்; ரஜினி, அப்படி செய்யவில்லை. கட்சி பற்றிய அறிவிப்பை, 2020 டிசம்பர் வரை ஏன் தள்ளிப் போட்டார்? அரசியல் விமர்சகர் சிலர் கூறுவது போல், ஏதோ ஒரு கட்சியின் அழுத்தத்தால் மட்டுமே, அரசியலுக்கு வருவதாக அறிவித்தாரா? அதற்கு ஏன், ரஜினி ஒப்புக்கொள்ள வேண்டும்? தனக்கு உடன்பாடில்லாத ஒன்றை செய்ய முடியாது எனக் கூறி மறுத்திருக்கலாமே? அரசியலில் இருந்து ரஜினி பின்வாங்கியதற்கு வயதும், உடல்நிலையும் மட்டும் காரணமாக இருக்க முடியாது. மர்மமான ஏதோ ஒன்று இருக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE