டெல் அவிவ் : உலகில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேகத்தில் இஸ்ரேல் முதலிடத்தில் உள்ளது.
கொரோனாவுக்கு அமெரிக்காவின் பைசர், மாடர்னா, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் போன்ற தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இஸ்ரேலில் 'பைசர்' தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. இங்கு இதுவரை 10 லட்சம் பேருக்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதுவே உலகில் அதிகம். 100ல்11.55 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் பஹ்ரைன், பிரிட்டன் உள்ளன என பிரிட்டனின் ஆய்வு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பரப்பளவு, மக்கள்தொகையில் சிறிய நாடு. ஏற்கனவே சுகாதார கட்டமைப்பு தொழில்நுட்பம் சிறப்பாக உள்ளது. அதே போல தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் எண்ணிக்கையும் அதிகம்.

தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு 'கிரீன் பாஸ்போர்ட்' வழங்கப்படுகிறது. இதை காண்பித்து ரெஸ்டாரன்ட், போக்குவரத்து இலவசமாக மேற்கொள்ளலாம். தனிமைப்படுத்துதலில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வத்தை அந்நாட்டு அரசு அதிகரித்துள்ளது.
தடுப்பூசி திட்டம் தொடங்கிய (டிச., 20) சில நாட்களிலேயே அதிக பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளது. கொரோனா முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தினமும் 1.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.