சலுகை போனாலும் பரவாயில்லை அடையாளம் தான் முக்கியம் என்று போராடும் தேவேந்திர குல வேளாளர்களை, நடிகர் கமல்ஹாசன் மீண்டும், ஆதி திராவிடர்கள் என கூறியுள்ளார். இது தவறு!
- புதிய தமிழகம்கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி
'உங்கள் ஆதங்கம், கமலுக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கும். இனி, திருத்திக் கொள்வார்...' என, கூறத் தோன்றும் வகையில், புதிய தமிழகம்கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை.
பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே பழமையான ஹிந்து கோவில், முஸ்லிம் பழமைவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினரை ஆதரிப்பது, பெரும்பான்மையினரின் கடமை. அந்த கோவிலை மீண்டும் கட்டி கொடுப்பது முஸ்லிம்களின் கடமை.
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்
'குடியுரிமைச் சட்டங்களை, இதற்காகத் தான், மத்திய அரசு கொண்டு வந்ததோ...' என, கேள்வி எழுப்பத் தோன்றும் வகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் அறிக்கை.
நடிகர் வடிவேலு நடிக்க தடை விதித்து, தயாரிப்பாளர் சங்கம், எழுத்துப்பூர்வமாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அவரை வைத்து சினிமா தயாரிக்க தயாராகும் தயாரிப்பாளர், முறைப்படி சங்கத்தை அணுகினால், தடை விலக்கிக் கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது.
- தயாரிப்பாளர் சங்கச் செயலர் ராதாகிருஷ்ணன்
'அப்போ, 'மீம்ஸ்'களில் மட்டுமே இருக்கும் வடிவேலை மீண்டும், சினிமாவில் பார்க்கலாமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தயாரிப்பாளர் சங்கச் செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி.
நடிகர் ரஜினிகாந்த், தன் உடல் நலத்தை காரணம் காட்டி, அரசியலில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்துள்ளார். என்னை பொறுத்தவரை அவரின் முடிவு, சரியானது. இப்போது அவரை நல்லவர் என சொல்லும் வாய், அரசியலுக்கு வந்த பின், கெட்டவர் என கூறும். அது தான் அரசியல்.
- தெலுங்கு நடிகர் மோகன்பாபு
'நீங்கள் தான், 'ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது' என, முதலில் இருந்தே கூறி வருகிறீர்களே...' என, கூறத் தோன்றும் வகையில், தெலுங்கு நடிகர் மோகன்பாபு பேட்டி.
கொரோனா பேரிடரின் போது, சென்னையில், மத்திய அரசிடம் கடனுதவிக்காக விண்ணப்பித்த, 3,835 சாலையோர வியாபாரிகளில், வெறும், 20 சதவீதம் பேருக்கே கடன் கிடைத்துள்ளது; 10 ஆயிரம் பேர் தொழிலை விட்டுள்ளனர். மத்திய நிதி அமைச்சர் அறிவித்த, 20 லட்சம் கோடி ரூபாயும் வரவில்லை.
- தி.மு.க., இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின்
'வியாபாரிகளில், 20 சதவீதம் பேர் தான், உண்மையான வியாபாரிகளாக இருப்பரோ...' என, சந்தேகம் கிளப்பத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை.
இலங்கையில் ராஜபக்சே சகோதரர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, ஈழத்தமிழர்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில், ஒவ்வொரு நாளும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதை, மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
- தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு

'அந்த நாட்டு விவகாரத்தை, அந்த நாடு கவனித்துக் கொள்ளும். நம்ம தமிழக விவகாரத்தில், கேரள முதல்வர் தலையிட்டால், நீங்கள் பொறுத்துக் கொள்வீர்களா...' என, காட்டமாக கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு அறிக்கை.
பொங்கல் பரிசுடன் பொங்கல் வைக்கத் தேவைப்படும் மண் பானை, மண் அடுப்பும்வழங்கியிருந்தால், வறுமையில் வாடும் மண்பாண்டத் தொழிலாளர் நிலை உயர்ந்திருக்கும். அதை செய்ய, இந்த அரசு தவறி விட்டது.
- மண்பாண்டத் தொழிலாளர் சங்க மாநில தலைவர் சோம நாராயணன்
'நல்ல, 'ஐடியா' தான். எளிதில் உடைந்து விடும் என கருதி, தமிழக அரசு வழங்காமல் விட்டதோ' என, அப்பாவித்தனமாக கேட்கத் தோன்றும் வகையில், மண்பாண்டத் தொழிலாளர் சங்க மாநில தலைவர் சோம நாராயணன் பேட்டி.
கொரோனா காலம் என்பதால், தேஜஸ் ரயிலுக்கு, பயணியர் மத்தியில் வரவேற்பு இல்லாமல் இருக்கலாம். அதற்காக, லாப - நஷ்ட கணக்கு பார்த்து, அந்த ரயிலை நிறுத்தி இருப்பதை திரும்ப பெற வேண்டும். மீண்டும் அந்த ரயிலை இயக்க வேண்டும்.
- எம்.பி., திருநாவுக்கரசர்
'இந்த லட்சணத்தில், புல்லட் ரயில் வேண்டும் என, நம் மக்கள் கேட்கின்றனர். கட்டணம் அதிகமாக இருக்கும் அந்த ரயில், நம்ம ஊருக்கு சரிப்பட்டு வருமா...' என, எண்ணத் தோன்றும் வகையில், திருச்சி காங்., - எம்.பி., திருநாவுக்கரசர் அறிக்கை.
தமிழகம் முழுதும், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர், நடிகர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது எந்த கூட்டத்திலும், தி.மு.க.,வை விமர்சித்து பேசவே இல்லை.
- அமைச்சர் பாண்டியராஜன்
'தேர்தலின் போது, கூட்டணிவைக்க வசதியாக தவிர்த்திருப்பாரோ...' என, சந்தேகம் கிளப்பத் தோன்றும் வகையில், தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி.
தி.மு.க., ஆட்சியில், மக்களுக்கு இலவசமாக, 'டிவி' கொடுத்த போது, ஒரு, 'டோக்கன்' குடுத்தனர்... அதில், அமைச்சர், கட்சி சின்னம், 'பிரின்ட்' செய்து தரப்பட்டது. தற்போது, ஆளுங்கட்சி வழங்கும் டோக்கனை எதிர்த்து, அரசியல் ஆதாயம்தேட பார்க்கின்றனர்.
- அமைச்சர் வேலுமணி
'நீங்கள் சொல்றதுபடி பார்த்தால், தி.மு.க., அடிச்சுவடை தான், அ.தி.மு.க., பின்பற்றுகிறது என்பது புரிகிறது...' என, கூறத் தோன்றும் வகையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி பேட்டி.