கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் மொத்தம் மூன்று இடங்களில், மினி கிளினிக் திறக்கப்பட்டது. கிருஷ்ணகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவசமுத்திரம், கட்டிகானப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட கீழ்புதூர் மற்றும் காவேரிப்பட்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பன்னிஹள்ளி ஆகிய இடங்களில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், முதல்வரின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடந்தது. ராஜ்ய சபா எம்.பி., முனுசாமி கிளினிக்கை திறந்து வைத்து பேசுகையில், 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை கண்டறிந்து, சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக சிகிச்சை பெற வசதியாக, மொத்தம், 50 அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட உள்ளன. இதுவரை, 18 மினி கிளினிக் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது,'' என்றார். தொடர்ந்து, 45 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தாய், சேய் ஊட்டச்சத்து நல பெட்டகம் மற்றும் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி பெறுவதற்கான ஆணைகளை, அவர் வழங்கினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE