கிருஷ்ணகிரி: நெற்பயிருக்கு, ஜிங்க் சல்பேட் இட, கிருஷ்ணகிரி வேளாண் உதவி இயக்குனர் முருகன் அறிவுரை வழங்கி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி வட்டாரத்தில், நவரை பருவத்தில், 2,500 ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நெற்பயிரில் துத்தநாகச்சத்து குறைபாடு காணப்படுகின்றது. ஒரே நிலத்தில், தொடர்ச்சியாக நெற்பயிர் சாகுபடி செய்வதால், நிலத்தில் எப்போதும் நீர் தேங்கி, கரையா உப்புக்கள் அளவு அதிகரித்து துத்தநாகச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகின்றது. மண்ணில், சுண்ணாம்பு தன்மை அதிகம் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக மணிச்சத்து, மெக்னீசியம் சத்து, இரும்புச்சத்து இடுவதாலும், துத்தநாகச்சத்து பற்றாக்குறை ஏற்படும். இதனால், பயிர் வளர்ச்சி குன்றி, இளம்இலைகள் மஞ்சள் நிற கோடுகள் கொண்டதாக மாறி, காய்ந்து விடும். நடு நரம்பை ஒட்டிய பகுதிகள், வெண்மை நிறக்கோடுகள் உருவாகி, இலைகள் வெளுத்து காணப்படும். இலைத்தாளின் அகலம் குறைந்து சிறுத்து விடும். நெற்கதிர், தூர்கள் பிடிக்கும் பருவத்தில், எண்ணிக்கை குறைந்து காணப்படுவதோடு, மலட்டுத்தன்மையுடன் விளைச்சல் குறைவு ஏற்படும். துத்தநாகச் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, ஏக்கர் ஒன்றுக்கு, 10 கிலோ ஜிங்க் சல்பேட், பயிர் நடவுக்கு முன்பு ஒரு முறையும், நட்ட பின், 30 முதல், 40 நாட்களுக்குள் ஒருமுறையும் இட்டு, பயிரின் துத்தநாகச்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE