அமைதியான பொண்ணு. யாரிடமும் எதற்காகவும் பேச மாட்டார். கேட்ட கேள்விக்கு வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னு டக் டக்ன்னு பதில் சொல்வார். கல்லுாரி நேரம் தவிர மற்ற நேரங்களில் புத்தகங்களை புரட்டுவார்.கொஞ்சம் விளையாட்டு, நிறைய படிப்பு என சக தோழிகளிடம் அடையாளம் காணப்பட்டவர். எப்படி இருந்த பொண்ணு... இப்படி படு பிஸியான ஆளாகி விட்டாங்களே... என கேட்க தோன்றும் வகையில் யூ டியூப் சேனலில் புரட்சிகரமான கதாபாத்திரங்களில் தோன்றி கலக்கி வருகிறார் மதுரை சட்டக் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவி ஏஞ்சலின் ஜீவனா. வழக்கறிஞர் தம்பதியான கண்ணன், கிறிஸ்டி ஆகியோரின் இளைய மகள் ஜீவனா. மூத்த சகோதரி ஏஞ்சலின் ஜான்வி நான்காம் ஆண்டு சட்டக்கல்லுாரி மாணவி.
சமூக பிரச்னைகள், குற்றம், சட்டம் - ஒழுங்கு தொடர்பான வழக்குகள், குழந்தை, பெண்கள் பாதுகாப்பு மற்றும் பிரச்னைகளை சட்டம் சார்ந்து எதிர் கொள்வது குறித்து யூ டியூப் சேனல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் ஜீவனா. இதற்காக உண்மை சம்பவங்களை ஆதாரமாக கொண்டு, அந்த கதாபாத்திரத்தை தானே ஏற்று நடித்து, வசனம் எழுதியும், இயக்கியும் பிஸியாக வலம் வருகிறார். பள்ளி, கல்லுாரிகளில் நடந்த பேச்சு போட்டிகளில் ஜீவனா முதலிடம் பெற்று விருதுகள், பதக்கங்களை குவித்துள்ளார்.
ஜீவனாவின் ஜீவனுள்ள வார்த்தைகளிலிருந்து...சமூக பிரச்னைகளை துணிவுடன் எதிர்கொள்ள யூ டியூப் சேனலை பயனுள்ளதாக மாற்றினேன். இந்த ஐடியாவை எனது தோழி ஸ்வீட்டி ஜெய தாரணி கொடுத்தார். எனது யோசனைக்கு பெற்றோர் ஒத்துழைப்பு தந்தனர். சட்டக் கல்லுாரி மாணவி என்பதாலும், குற்ற வழக்குகள் பற்றிய அதிக ஈடுபாடு ஏற்பட்டதனால் உண்மையான கிரைம் பதிவுகளை தத்ரூபமாக எடுத்து சட்டம் சார்ந்த தீர்வுகளை வழங்கி வருவதால் அதனை பார்ப்பவர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.
பூலான் தேவியை போல வேடமணிந்து 'புயல் ஒன்று; பூ ஆனது' என யூ டியூப் பார்ட் 1க்கு தலைப்பு வைத்தேன். அதில் நானே பூலான் தேவி கேரக்டரில் நடித்தேன். கொள்ளைக்காரியாக இருந்த பூலான் தேவி எம்.பி.,யாக உயரும் அளவுக்கு சமூகம் அவருக்கு எப்படியான மாற்றங்களை ஏற்படுத்தி கொடுத்தது. வாழ்க்கையில் அவர் எப்படி உயர்ந்தார் என்பதை தத்ரூபமாக சித்தரித்துள்ளேன்.ஒவ்வொரு வீடியோவின் இறுதியில் வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை தெரிவிக்கிறேன். குழந்தைகள், பெண்களுக்கான குற்றங்கள் தொடர்பான சட்டங்களை பற்றி நான் வழங்கும் எண்ணற்ற கிரைம் வீடியோக் கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். விரைவில் சமூகம் சார்ந்த குறும்படம் வெளியிட உள்ளேன். எனது சமூக லட்சிய விழிப்புணர்வு பயணம் தொடரும் என்றார்.
இவரை வாழ்த்த 97862 81536.
-காசு
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE