சென்னை: வாசகர்களே, தமிழில் எத்தனையோ நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றி பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிவதில்லை. அதற்காகவே தமிழில் வெளிவரும் சிறந்த புத்தகங்களை தினமலர் இணையதள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த வாரம் கீழ்க்கண்ட புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். வாசிக்கும் தாகமுள்ள வாசகர்கள் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து படிக்கலாம். வாசிக்கும் இன்பத்தை அனுபவிக்கலாம். ஒவ்வொரு ஞாயிறும் தினமலர் இணையதளத்தில் இந்தப் பகுதி வெளிவரும்.
01. தமிழ் படிக்க எழுத 45 நாட்கள் ஆசிரியர் பெற்றோர் கையேடு
ஆசிரியர்: முனைவர் மு.கனகலட்சுமி
வெளியீடு: சிவசக்தி பதிப்பகம்
4, முனியாண்டி மேற்கு சந்து,
வடக்கு தெரு, ராமநாதபுரம்.
அலைபேசி: 93455 71942
பக்கம்: 180 விலை: ரூ.500
தமிழ் மொழியை எளிதாக கற்பிக்கும் வகையில் நுட்பமாக ஆய்வு செய்து, உருவாக்கப்பட்டுள்ள பயிற்சி நுால். பெற்றோரும், ஆசிரியரும் பயன்படுத்த தக்க வகையில் உள்ளது. பின்தங்கிய கிராம அரசுப்பள்ளி மாணவ -மாணவியரிடம் சோதனை முறையில் அமல்படுத்தி, மேம்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அதிகாரியின் பாராட்டும் பெற்றுள்ளது.
தாய்மொழி கற்பித்தலில், பெற்றோர், ஆசிரியருக்கு உள்ள பங்கை துல்லியமாக உணர்த்தி, எளிய அணுகு முறையில் பாடங்கள் எழுதப்பட்டுள்ளன. புரிந்து கற்க ஏதுவாக, 45 நாட்களுக்கு சிறப்பு பாடங்கள் உள்ளன. வலிந்து கற்பிக்கும் முறையை முற்றாக நிராகரித்து, சூழலுடன் தொடர்புபடும் வகையில் உள்ளது.
மொழி பயிற்சி விளையாட்டு, சொற்றொடர் பயிற்சி விளையாட்டு என நிகழ்த்துதல் வழி பாடங்கள் உள்ளன. சிறுவர் - சிறுமியரின் ஆர்வத்தை துாண்டும் வகையில் அமைந்துள்ளது. அதன் ஊடே, இலக்கண மரபுகள் புரியும் வகையில் கூறப்பட்டுள்ளன.
ஐம்புலன்கள் சார்ந்த பயிற்சியே மொழியை முழுமையாக்கும் என்ற கருத்து நிரம்பியுள்ளது. உச்சரிப்பு முதன்மை படுத்தப்பட்டுள்ளது. பாடல்களுக்கு சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. வட்டாரக் கதைப்பாடல்கள் செதுக்கப்பட்டுள்ளன. மொழியை முறைப்படி கற்பதால் ஏற்படும் பயன் விளக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியில் பயிற்சி பெற, 45 நாட்கள் போதும் என்ற ஆசிரியரின் துணிச்சல், புத்தக பக்கங்களில் மிளிர்கிறது. அதற்கான முழு உழைப்பையும் செலுத்தியுள்ளார். கருத்துக்கள் சிறு தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளன.
அடிப்படை திறன்களான, கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகியவற்றுக்கு தனித்தனியாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை வளர்க்கும் முறைகள், வளர்ப்பதால் ஏற்படும் பயன்கள் என விளக்கப்பட்டுள்ளது.
சிறுவர் - சிறுமியருக்கு எளிதாக பெற்றோரே கற்பிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள புத்தகம். தமிழ் மொழி கற்பித்தலில் புதிய அணுகுமுறையுடன் வந்துள்ளது.
- அமுதன்
02. லவ குசா
ஆசிரியர்: தி.செல்லப்பா
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
21, 'லட்சுமி' சத்யசாய் நகர்,
மதுரை - 625 003.
டோல்ப்ரீ: 1800 425 7700
பக்கம்: 120 விலை: ரூ.150

விசேஷம் இது வித்தியாசம் என்ற பெயரில் தமிழக கோவில்களின் அதிசய வரலாறு, செல்லும் வழி குறித்து எழுதிய செல்லப்பாவின் இரண்டாவது புத்தகம்.
கர்ப்பிணியாய் கானகம் சென்ற சீதாவின் வயிற்றில் பிறந்த கன்றுக்குட்டிகளாம் லவன், குசன் பற்றிய அழகான தொகுப்பு இது. இக்கதையில் மணமுடிக்கும் போது சீதாவின் வயது, கானகம் சென்ற போது வயது, மகப்பேறின் போதுள்ள வயதை குறிப்பிடுவது அரிய தகவல். பொறுமையின் சிகரமான சீதா ஏன் பொங்கி எழுந்தாள்... வானளாவ புகழ்ந்து சொல்லிய அவளது புத்திரர்கள் ஏன் ராமபிரான் மீது கோபப்பட்டு அஸ்வமேத யாகம் செய்யக்கூடாது என எதிர்த்தனர் என்ற கேள்விகளுக்கு விளக்கம் அலாதியானது.
சீதாவின் குணநலன்களை விளக்கும் போதெல்லாம் நடப்பிலுள்ள நிகழ்வுகளை, பெண்களின் வரலாற்றை ஒப்பீடு செய்கிறார். அந்தக் காலத்தில் பெண்கள் எப்படி இருந்தனர், இப்போது எப்படி உள்ளனர் என மனத்தாங்கலையும் வெளிப்படுத்தியுள்ளார். லவகுசா புத்தகம், சீதை புத்திரர்களை மட்டுமல்ல... சீதை, ராம சகோதரர்களின் மாண்பையும் விளக்குவது கூடுதல் சிறப்பு.
- எம்.எம்.ஜெ.,
03. பிடிச்சிருக்கா
ஆசிரியர்: ம.திருவள்ளுவர்
வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம்
17, பாய்க்காரத் தெரு, உறையூர், திருச்சி -- 620 003.
அலைபேசி: 94432 84823
பக்கம்: 120 விலை: 150

வாழ்க்கை மேம்பாட்டிற்குத் தேவையான தத்துவங்களை விளக்கும் நுால். சுறுசுறுப்பாக இருப்பதற்கு உடற்பயிற்சி போதும். சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு மனப்பயிற்சியும், விழிப்புணர்வும் அவசியம் என்கிறார்.
உரிய நேரத்தில் ஆற்றலையும் தனித்திறமையையும் கண்டுபிடிக்காதவர் பின்தங்கிவிடுவர் என்கிறார். சாமானியன் என்று எண்ணிக் கொண்டிருக்காமல், கலாம் போல உயர்ந்த மனிதராக மாறியாக வேண்டும். அதற்கு உரிய ஆற்றல், திறமையை உரிய நேரத்தில் கண்டு உணர வேண்டும். காத்திருக்கப் பழக வேண்டும். பொறுமையை வளர்க்க வேண்டும்.
வெற்றியின் இலக்கணமாக தொடர் தோல்விகளுக்குத் துவண்டு விடாது, முயற்சிகளை ஆராய்ந்து துறைசார் ஆலோசனை பெற்று நடைமுறைப்படுத்தி வெற்றியைப் பெறலாம். வெற்றியை அடையும் வழியை எளிய மொழி நடையில் விளக்குகிறது.
- முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்
04. பாலில் சர்க்கரை பழுதாகலாமோ?
ஆசிரியர்: ப.க.பொன்னுசாமி
வெளியீடு: கனவு
8/2635, பாண்டியன் நகர்,
திருப்பூர் - 641602.
அலைபேசி: 94861 01003
பக்கம்: 88 விலை: ரூ.80

பல்கலைக் கழகங்களில் துணை வேந்தராக பணியாற்றிய பேராசிரியரின் கட்டுரை தொகுப்பு நுால். சில கட்டுரைகள், அவர் படித்த கல்வி நிறுவனங்களை சிறப்பாக நினைவு கூர்ந்துள்ளன. இரண்டு தீபாவளி என்ற கட்டுரையில், சோக நிகழ்வுகள் சொல் ஓவியமாகியுள்ளன. மகன் நாவரசு நினைவுடனும், ஆழ்துளைக் குழாயில் உயிர் விட்ட சிறுவன் சுஜித் நினைவுடனும் வரைந்துள்ளார்.
சென்னையிலிருந்து புறப்படும் நிகழ்வை ஒரு கட்டுரையாக வடித்துள்ளார். சென்னை வரும்போது, மகன் இருந்தான்; நாய் ஜானியும் இருந்தது. போகும்போது மகனும் இல்லை; அன்பு நாயும் இல்லை என்ற பொருண்மையில் எழுதி உள்ளது, பாரி மகளிர் சோகத்தையும் தாண்டி அமைந்துள்ளது.
பாலுக்குச் சர்க்கரையால் சுவை கூடவேண்டுமே அல்லாமல், சர்க்கரையால் பால் நஞ்சாகிவிடக் கூடாது என்பதை விளக்கி, சிறுபான்மை பற்றிய வரலாற்றுச் சொல்லாடலையும் நிகழ்த்தியுள்ளார். கட்டுரைகள் சிந்திக்க வைக்கின்றன. எண்ணத்திற்கு வலிமை கூட்டும் வடிவத்தில் அமைந்துள்ளன.
- முகிலை ராசபாண்டியன்
05. வேத கணிதம் செயல்முறைகள்
ஆசிரியர்: மு.தனசேகரன்
70, ஆழ்வார் தெரு,
கோவில்பட்டி - 628 501.
பக்கம்: 350 விலை: ரூ.275

வேதக் கணிதம் என்பது வேகக் கணித முறையாகும். கருவியால் செய்து முடிக்கும் கணிதத்தை, மனதால் வினாடியில் முடித்துக் காட்டுகிறது.
கணினி, கால்குலேட்டருக்கு அடிமையான மூளையை, வேதக் கணித முறையால் மீட்டு விடலாம் என்கிறது இந்த நுால். மாணவருக்கு பெரிதும் பயன் தரும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதர்வண வேதத்தில் இக்கணிதத்தில், 16 சூத்திரங்களும், 13 உபசூத்திரங்களும் உள்ளன. இவற்றை, புரி கோவர்த்தன மடத்து சங்கராச்சாரியார் உருவாக்கினார்.
வேதக் கணிதம் மூலம் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், வர்க்கம், வர்க்கமூலம், கனம், கனமூலம், சிக்கல் எண்கள், வகுபடு தன்மை, இயற்கணிதம், நுண்கணிதம், இருபடி சமன்பாடு, பிதாகோரஸ் தேற்றம் போன்றவற்றை மிகக் குறைந்த நேரத்தில் விரைவாக விடை காணும் முறைகளை விளக்கியுள்ளார்.
வேதக் கணக்கின், 32 சூத்திரங்களும் தரப்பட்டுள்ளன. இதன் விளக்கத்தை தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்கியுள்ளார். கணிதக் காதலர்களுக்கு உதவும் நுால்.
- முனைவர் மா.கி.ரமணன்
06. பால் டம்ளர்
மொழிபெயர்ப்பு: ராஜி ரகுநாதன்
வெளியீடு: கனவு
திருப்பூர்.
அலைபேசி: 98490 63617
பக்கம்: 232 விலை: ரூ.150

தெலுங்கு மொழி பெண் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இந்த தொகுப்பில், 21 எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் இடம் பெற்றுள்ளன. இந்த கதைகள் அனைத்தும் தெலுங்கு மொழி பத்திரிகைகளில் வெளியவந்து புகழ் பெற்றவை. தெலுங்கு மொழி பேசும் பகுதிகளின் தன்மையை பிரதிபலிக்கின்றன. புதுமையான திருப்பங்களைக் கொண்டுள்ளன.
மிகவும் எளிய நடையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வாழ்வின் நுட்பங்களை உணர்த்தும் புனைவுகளின் தொகுப்பு நுால்.
07. ஒரு சாமானியனின் ஒரு பக்க கதைகள்
ஆசிரியர்: கா.ஜோதி
வெளியீடு: கவிநிலா பதிப்பகம்
திருப்பூர்.
அலைபேசி: 90255 26279
பக்கம்: 116 விலை: ரூ.130

சிறு சம்பவங்களைக் கொண்டு எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 100 கதைகள் உள்ளன. அன்றாடம் செய்திகளில் அடிபடும் சம்பவங்களை, அறத்துடன் கோர்த்து கதைகளாக்கியுள்ளார்.
மிகச் சாதாரணமான சம்பவங்கள் கூட கதைகளாகியுள்ளன. எச்சரிக்கும் விதமாகவும், அறிவுறுத்தும் வகையிலும், சேவைகளை மேன்மைப்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளன. முன்னுதாரணமாக பல கதைகள் அமைந்து உள்ளன.
08. எத்தனை கோணம் எத்தனை பார்வை
ஆசிரியர்: சீத்தலைச்சாத்தன்
வெளியீடு: ஒப்பிலாள் பதிப்பகம்
திருப்புத்துார் - 630211.
அலைபேசி: 98424 90447
பக்கம்: -88 விலை: ரூ.99

கவிஞர் கண்ணதாசனின் பார்வைகள் பற்றி ஐந்து தலைப்புகளில் மிளிரும் நுால். கண்ணதாசனின் அனுபவங்களும் பளிச்சிடுகின்றன.
என்ன துணிச்சல், யாருக்கு வரும் இந்தத் துணிச்சல், மணவிழாப் பாட்டு கேள்விப்பட்டது உண்டு. ஆனால், இறந்த பின் இறுதி ஊர்வலத்தில் பாட, 1966ல் எழுதிய மரண சாசனம், ஏழு பாடல்களில் எழுதியுள்ளார் கண்ணதாசன். கண்ணதாசன் வாழ்வில் நிகழ்ந்த பல ருசிகரமான தகவல்களைத் தருகிறது.
- பேராசிரியர் இரா.நாராயணன்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE