'சர்வைலன்ஸ் ஸோன்' எனும் 1 மணி நேரம் 40 நிமிடம் ஓடும் முழுநீள படத்தை ரூ.45 ஆயிரம் பட்ஜெட்டில் எடுத்து சாதனை படைத்துள்ளார் இளம் இயக்குனர் ரத்னகுமார். பல்வேறு சினிமா விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டு விருதுகளையும் குவித்துள்ளது. முழுப்படமும் கண்காணிப்பு கேமரா கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்டதால் திரைவிமர்சகர்களிடமும் பாராட்டுக்களை பெற தவறவில்லை.
இயக்குனர் ரத்னகுமார் கூறியதாவது... சொந்த ஊர் நாகர்கோவில். பள்ளி நாட்களில் இருந்தே சினிமாவில் அதிக ஈடுபாடு. 2011ல் சென்னை வந்து பணிபுரிந்து கொண்டே சினிமா வாய்ப்பு தேடினேன். 6 ஆண்டு தேடலுக்கு பின் 'மை சன் இஸ் கே' எனும் படத்தில் உதவி இயக்குனராக வாய்ப்பு கிடைத்தது. அனுபவம் கிடைத்த பின் தனியாக படம் இயக்க முடிவு செய்தேன். வித்தியாசமாகவும், திரைப்பட விழாக்களில் பங்கேற்ற படங்களில் இதுவரை யாரும் செய்யாத புது முயற்சியாகவும் இருக்க திட்டமிட்டேன். முழுக்கதையும் சிசிடிவி கோணத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என யோசித்தேன். அப்போது உருவானது தான் இந்த 'சர்வைலன்ஸ் ஸோன்' கதைக்கரு.
40 வயதாகும் ரங்கசாமி போலீஸாக பணிபுரிகிறார். இவரை உதவி கமிஷனர் பாஸ்கர் அமைச்சர் ஒருவரை கண்காணிக்கும் பணிக்கு ஈடுபடுத்துகிறார். இதற்காக ரங்கசாமி இரவு நேர கண்காணிப்பில் இருக்கும் போது உதவி கமிஷனர் பாஸ்கர் மகள் காணாமல் போகிறார். மகளை கண்டுபிடிக்க ரங்கசாமி அனைத்து சிசிடிவி காட்சிகளைகண்காணிக்கிறார். முடிச்சுகளை அவிழ்த்து உதவி கமிஷனரின் மகளை கண்டுபிடித்தாரா என்பது தான் மீதி கதை.
முக்கிய கதாபாத்திரமான ரங்கசாமி வேடத்தில் ரவி ஏழுமலை நடித்தார். பல இடங்களில் அனுமதி கிடைக்காததால் யாருக்கும் தெரியாமல் கேமராவை ஒரு இடத்தில் வைத்து விட்டு நடிகர்களை இயல்பாக நடிக்க செய்தேன். படத்தில் இசை கிடையாது. சிசிடிவி கேமராவில் என்ன அளவுக்கு ஒலி இருக்குமோ அதே தான் இதிலும் இருக்கும். சவுண்ட் டிசைன் செய்த இக்பால், குணா, ரகுராம் ரவிச்சந்திரன் பங்கு பெரியது.
திரைக்கதை, வசனம், இயக்கம் மட்டுமல்லாது, ஒளிப்பதிவு, எடிட்டிங் நானே செய்தேன். என்னுடைய அம்மா கேன்சரால் அவதிப்பட்டதால் மருத்துவமனையில் வைத்தே எடிட்டிங் செய்ய நேர்ந்தது. எங்கள் படம் கனடாவின் டொராண்டோவின் சர்வதேச இந்திய திரைப்பட விழாவால் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது. இதை தவிர கோல்கட்டா சர்வதேச கல்ட் பிலிம் பெஸ்டிவல், தாதாசாகேப் பால்கே பிலிம் பெஸ்டிவல், காஸ்மோ திரைப்பட விழா உள்ளிட்ட 9 திரைப்பட விழாக்களில் தேர்வாகி திரையிடப்பட்டுள்ளது. அதே போல் ஆசியா, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனை புத்தகங்கள் எங்கள் படத்தை சாதனை படமாக அங்கீகரித்துள்ளது. விரைவில் ஓ.டி.டி., தளத்தில் வெளியாக உள்ளது, என்றார்.
வீரா
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE