பெங்களூரு:
பெங்களூரு, பெலகாவி உட்பட வெவ்வேறு பகுதிகளில் மாநிலம் முழுவதும், 35 வழக்குகளில் தேடப்பட்டு வந்த, உத்தர பிரதேசத்தை சேர்ந்த, இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 2.25 கோடி ரூபாய் மதிப்பிலான, நான்கு கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.பெங்களூரின் வெவ்வேறு பகுதிகளில், பூட்டிக்கிடக்கும் வீடுகளில் திருடி வந்த பயும், 35, சலிம் முகமது, 42 ஆகிய இருவரை, சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.இவர்கள், உத்தர பிரதேச மாநிலம், முராதாபாத்தை சேர்ந்தவர்கள். உத்தர பிரதேசத்திலிருந்து காரில் வந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.இவர்களிடமிருந்து, 2.25 கோடி ரூபாய் மதிப்புள்ள, நான்கு கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இருவர் மீதும், நகரின் வெவ்வேறு காவல் நிலையங்களில், 35 வழக்குகள் பதிவாகியிருந்தன. பெங்களூரு மட்டுமின்றி, பெலகாவி, கோவா மாநிலத்தின் பனாஜி, தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரங்களிலும் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.உத்தர பிரதேசத்தில், 2016 ல், நடந்த திருட்டு சம்பவத்தில் இருவர் மீதும் வழக்கு பதிவாகி, நொய்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 2017 ல், ஜாமினில் வெளியே வந்து, மீண்டும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த், நேற்று பார்வையிட்டார்.பின் அவர் கூறியதாவது:நகரின் வெவ்வேறு பகுதிகளில், திருடப்பட்ட தங்க நகைகள், உத்தர பிரதேசம், டில்லி, ஹரியானாவில் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.இதன் பேரில், ஹரியானாவுக்கு சென்று, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.விசாரணையின் போது, குற்றவாளிகள் போலீசுக்கு தவறான தகவல் அளித்தனர். ஆனால், தீவிர விசாரணை நடத்திய போது, உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.தங்க நகைகள் திருடிய பின், இருவரும் சரிசமமாக பிரித்து கொண்டு, உத்தர பிரதேசத்திலுள்ள உறவினர் வீட்டில் வைத்துள்ளனர். பின், அதை கொஞ்சம் கொஞ்சமாக விற்றுள்ளனர்.சி.சி.பி., அதிகாரிகள், உத்தர பிரதேசத்துக்கு சென்று, நான்கு கிலோ தங்கத்தை, பறிமுதல் செய்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு, 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE