நாமக்கல்: 'நூல் விலை ஏற்றத்தால், விசைத்தறி கூடங்கள் மூடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் விசைத்தறி சங்க முன்னாள் பொருளாளர் சிங்காரம், முதல்வர் பழனிசாமிக்கு மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், விவசாயத்துக்கு இணையாக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விசைத்தறி, கைத்தறி நெசவுத்தொழில், கடந்த, இரண்டு மாதங்களாக பெரும் பின்னடவை சந்தித்து வருகிறது. நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், கோவை, திருப்பூர், தர்மபுரி, விருதுநகர் உள்ளிட்ட, 10 மாவட்டங்களில் உள்ள மக்களின் பிரதான தொழிலாக, நெசவுத்தொழில் உள்ளது. இந்நிலையில், பருத்தி நூல் விலை உயர்வால், தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. நவம்பரில், 40ம் எண் நூல், 50 கிலோ கொண்ட ஒரு பண்டலின் விலை, 8,900 ரூபாயாக இருந்தது. அது, தற்போது, 11 ஆயிரத்து, 300 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, விசைத்தறிக் கூடங்கள் மூடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பஞ்சு விலை உயர்வு, நூல் ஏற்றுமதி போன்ற காரணங்களால், உள்நாட்டில், நூல் விலை உயர்ந்துள்ளதாக, நூல் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த, ஓராண்டாக, கொரோனா ஊரடங்கு காரணமாக, முடங்கிப்போன விசைத்தறி தொழில், பொங்கல் பண்டிகை காலத்தில் கை கொடுக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடுமையான நூல் விலை உயர்வு காரணமாக, நெசவாளர்கள் விழிபிதுங்கி உள்ளனர். ஏற்கனவே, ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், ஜவுளியின் விலை, 20 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது, நூல் விலை உயர்வால், மேலும், ஜவுளியின் விலை, 30 சதவீதம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இந்த விலை ஏற்றம், பொதுமக்களையும், ஜவுளி வியாபாரிகளையும் பாதிக்கும் நிலை உள்ளது. நூல் விலையை குறைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE