புதுடில்லி: இந்தியாவில் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் போன்ற முன்கள பணியாளர்களுக்கு 3 கோடி தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவித்தார்.
இந்தியாவில் இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தாக்கியிருக்கிறது. அவர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 1.5 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியான கோவிஷீல்டு மற்றும் இந்திய நிறுவனமான பாரத் பையோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டிற்கு மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியர்களுக்கு கிடைக்கும் முதல் தடுப்பூசியாக இவை இரண்டும் அமைகிறது. இது தவிர மேலும் 2 தடுப்பூசிகள் அனுமதிக்காக காத்திருக்கின்றன.

தடுப்பூசி விநியோகம் தொடர்பான ஒத்திகை அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் முதல் கட்டமாக 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். அவர்களில் 1 கோடி சுகாதார பணியாளர்கள் மற்றும் 2 முன்கள பணியாளர்கள் அடங்குவர். ஜூலை வரை 27 கோடி பயனாளிகளுக்கு எவ்வாறு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். தடுப்பூசியின் பாதுகாப்பு பற்றி குறிப்பிட்ட அமைச்சர், “ஆரம்பத்தில் போலியோ தடுப்பூசி வந்த போது கூட வதந்திகள் பரவின. ஆனால் அவை பயன்பாட்டுக்கு வந்த பிறகு அனைத்து மக்களுக்கும் உறுதி அளிக்கப்பட்டது.” என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE