லக்னோ : கொரோனா தடுப்பூசியை நான் போட்டுக் கொள்ள மாட்டேன், பா.ஜ.,வின் தடுப்பூசியை எப்படி நம்புவது'' என, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியது சர்ச்சையானது. இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என டுவிட்டரில் பலரும் விளாசி வருவதால் இந்த விஷயம் டிரெண்ட் ஆனது.
கொரோனாவை தடுக்கும் பொருட்டு பல நாடுகளும் தாங்கள் கண்டுப்பிடித்த தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வர துவங்கி உள்ளனர். இந்தியாவில் நேற்று முதற்கட்டமாக கொரோனா தடுப்பு ஊசி ஒத்திகை பல மாநிலங்களில் நடந்தது. மேலும் கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ‛கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த, இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பு விஷயத்தில் முக்கியமான விஷயமாக இது பார்க்கப்படுகிறது. அதோடு மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையும் பிறந்துள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், ''நான் இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன். கொரோனா வைரசை தடுக்க, பா.ஜ.,வால் உபயோகிக்கப்பட உள்ள தடுப்பு மருந்தை, நான் எப்படி நம்புவேன். எங்கள் அரசு அமையும் போது அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். பாஜகவின் தடுப்பூசியை நாங்கள் போட்டுக்கொள்ளமாட்டேன்'' என தெரிவித்துள்ளார்.

அகிலேஷின் கருத்திற்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
சமூகவலைதளமான டுவிட்டரிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ''கொரோனாவால் மக்கள் துன்பப்பட்டு வரும் வேளையில், உயிரிழப்புகள் நிகழ்ந்த சூழலில், மக்களுக்கு நம்பிக்கை தரும் விதமான தடுப்பூசி என்ற ஒன்று இந்தியாவில் பயன்பாட்டிற்கு வர தொடங்கி உள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கு கிடைத்த வரவேற்பாக பார்க்க வேண்டும். ஆனால் அரசியல் லாபத்திற்காக இதுபோன்ற கருத்தை அகிலேஷ் தெரிவிப்பது சரியல்ல. இந்த விஷயத்தில் கூட அரசியல் செய்வது முறையற்றது. அவர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
கொரோனாவிற்கு எதிராக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை பாஜகவின் தடுப்பூசி என பெயரிட்டு அழைக்கும் அகிலேஷ் போன்ற அரசியல்வாதிகளை என்னவென்று சொல்வது. உண்மையில் இந்தியாவுக்கு துரதிர்ஷ்டவசமானது தான். இந்த சகிப்புதன்மையை எல்லாம் இந்தியாவில் எவ்வளவு காலம் அனுமதிப்பது. இதுபோன்ற தரம் தாழ்ந்த அரசியல் செய்து, மக்களை தவறாக வழி நடத்த வேண்டாம். மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளை அவமதித்ததற்காக அகிலேஷ் யாதவ் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என பலரும் கருத்து பதிவிட்டு அவரை விளாசி தள்ளி உள்ளனர்.
இன்னும் சிலர் இவர் உண்மையான பப்பு, நவீனகால பப்பு என கிண்டல் செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் அவரை வைத்து நிறைய கேலி சித்திரங்களும், பகிரப்பட்டு வருகின்றன. இதனால் டுவிட்டரில் அகிலேஷ், மன்னிப்பு கேள் அகிலேஷ் போன் ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE