புது டில்லி: சீரம் இந்தியாவின் கோவிஷீல்டு, பாரத்பையோடெக்கின் கோவாக்சின் ஆகிய இந்திய தயாரிப்பு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசிக்கான இந்தியாவின் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராசெனகா உருவாக்கத்தில் இந்தியாவின் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வரும் கோவிஷீல்டு மற்றும் பாரத்பையோடெக்கால் முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய பொது மருந்து கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் தந்தார். இதனை தற்போது அவசரகாலத்திற்கு மட்டுமே பயன்படுத்த அனுமதித்துள்ளனர்.

இந்த அறிவிப்புக்கு பிறகு பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: ஆக்கப்பூர்வமான போராட்டத்தை வலுப்படுத்தும் திருப்புமுனை இது. சீரம் இந்தியா மற்றும் பாரத் பையோடெக் தடுப்பூசிகளுக்கு டி.சி.ஜி.ஐ., ஒப்புதல் வழங்கியிருப்பது ஆரோக்கியமான மற்றும் கொரோனா இல்லாத தேசம் என்ற பாதையை அடைவதை விரைவாக்கும். இந்தியர்களுக்கு வாழ்த்துகள். கடுமையாக உழைத்த விஞ்ஞானிகளுக்கும், கண்டுபிடிப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.
அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும். தன்னிறைவு இந்தியா கனவை நிறைவேற்ற நமது விஞ்ஞான சமூகத்தின் ஆர்வத்தை இது காட்டுகிறது. இதன் வேர் பரிவும், பாசமும் ஆகும். மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், விஞ்ஞானிகள், காவல் துறை பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அனைத்து கொரோனா வீரர்களுக்கும் எங்கள் நன்றியை மீண்டும் தெரிவிக்கிறோம். பல உயிர்களைக் காப்பாற்றியதற்காக அவர்களுக்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். என நெகிழ்ச்சிபட குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE