பல்லடம்: கந்த புராணத்தை வைத்து கட்சி விளம்பரம் தேட முயன்ற தி.மு.க.,வுக்கு காமாட்சிபுரி ஆதீனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக மதம் சார்ந்த நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவது டிரெண்டாக மாறிவிட்டது. ஆன்மிக பெரியோர்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள் இதுபோன்ற செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தும், மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், தி.மு.க.,வினர் கந்தபுராணத்தை கொச்சைப்படுத்தி, கட்சி விளம்பரம் தேட முயன்றுள்ளனர். இதற்கு காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கந்தபுராணத்தில், ‛வான்முகில் வழாதுபெய்க, மலிவளம் சுரக்க மன்னர் கோன்முறை அரசு செய்க, குறைவிலாது உயிர்கள் வாழ்க, நான்மறை அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்' என்று மங்கல வாழ்த்து பாடல் இடம்பெற்றுள்ளது.

இதை மைந்தன் கோன்முறை அரசு என்று கருணாநிதி, ஸ்டாலின் படத்தை காண்பித்தும், மேன்மைகொள் சமூக நீதி ஐம்பெரும் அறங்கள் ஓங்க, நன்னெறி தொழில்கள் மல்க ' என்று பாடல்வரிகளை தஙகளது கட்சிவிளம்பரத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளனர்.
இது குறித்து காமாட்சிபுரி ஆதினம் கூறியதாவது: மேற்கூரிய கந்தபுராண பாடல் தேசிய கீதத்தை போன்று உலகம் சிறப்புற இறைவனிடம் வேண்டும் பாடல். பெரும்பான்மையான மக்கள் வழிபடும் பாடலை கொச்சைபடுத்தும் விதமாக அரசியல் கட்சி வெளியிட்டுள்ள பாடல் வரிகள் அமைத்துள்ளன. அரசியல் கட்சிகள் தங்களது கொள்கை கோட்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் செயல்களை கைவிட வேண்டும். மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து வருமேயானால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில், கந்தசஷ்டியை இழிவுபடுத்தி யூ டியூப்பில் வெளியான கருத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. அது ஓய்வதற்குள் தி.மு.க.,வினர் கந்தபுராணத்தை டப்பிங் செய்து வீடியோ பாடல் வெளியிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது.