சோழவரம் : கத்தியை காட்டி மிரட்டி, தன்னை பலாத்காரம் செய்ய முயன்றவனை, அதே கத்தியால் வெட்டி கொலை செய்த பெண், போலீசில் சரண் அடைந்தார்.
சோழவரம் அடுத்த, ஒரக்காடு அருகே உள்ள அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதமி, 19. இவர், காவல் துறையில், காவலர் பணியில் சேருவதற்கான தேர்வு எழுதி, அதன் முடிவிற்காக காத்திருக்கிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் உறவினர் அஜித்குமார், 25, வீட்டிற்குள் புகுந்து, கவுதமியை கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரத்தில் ஈடுபட முயன்றார்.துணிச்சலாக அதை எதிர்கொண்ட கவுதமி, அஜித்குமாரை தள்ளிவிட்டு, அவனிடம் இருந்த கத்தியை பறித்து, தற்காப்பிற்காக அவனை சரமாரியாக வெட்டி உள்ளார்.
பின் கத்தியுடன், சோழவரம் காவல் நிலையம் சென்று, நடந்த சம்பவங்களை கூறி, சரண் அடைந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அஜித்குமார் இறந்து இருந்தார். அதை தொடர்ந்து, போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இச்சம்பவம் தொடர்பாக, சோழவரம் போலீசார் வழக்கு பதிந்தனர். சரண் அடைந்த கவுதமி, காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு பொன்னேரி டி.எஸ்.பி., கல்பனாதத்த விசாரித்து வருகிறார்.தற்காப்பிற்காக இந்த கொலை நடந்திருப்பதால், அவர் மீது போடப்பட்டுள்ள கொலை வழக்கு, மாற்றப்பட்டு விடுவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.நேற்று மாலை, அஜித்குமாரின் சடலம் பிரேத பரிசோதனை முடிந்து, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பலாத்காரம் செய்ய முயன்றவனை, பெண்ணே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE