காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று நடந்த, 'குரூப் - 1' தேர்வுக்கு, ஒரு நிமிடம் தாமதமாக சென்ற, 18 தேர்வர்களை வெளியேற்றியதால், அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் - 1 தேர்வு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று நடந்தது. மாவட்டத்தின், 21 மையங்களில், 5,384 பேர் மட்டும் தேர்வு எழுதினர்.இதில், காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் சங்கரா கல்லுாரிக்கு தேர்வு எழுத சென்ற செங்கல்பட்டு, வாலாஜாபாத், மறைமலை நகர், காஞ்சிபுரம் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த, 18 பேர், தேர்வு மையத்திற்கு, 9:16 மணிக்கு சென்றனர்.தேர்வுக்கு, 9:15 மணிக்கு வர அறிவுறுத்தப் பட்ட நிலையில், ஒரு நிமிடம் கால தாமதம் எனக்கூறி, அந்த, 18 பேரை தேர்வு எழுதவிடாமல், திருப்பி அனுப்பிவிட்டனர்.
இதனால், தேர்வர்கள் மிகவும் அதிருப்தி அடைந்தனர். மொத்தம், 4,152 பேர், தேர்வுக்கு வரவில்லை. தேர்வு நடந்த மையங்களில், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, ஆய்வு செய்தார்.2,457 பேர் பங்கேற்பு திருவள்ளூர் மாவட்டத்தில், அரண்வாயல் பிரதியுஷா பொறியியல் கல்லுாரியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையத்தால் நடத்தப்படும், 'குரூப் - -1' தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வை, கலெக்டர் பா.பொன்னையா, ஆய்வு செய்தார்.பின் அவர் கூறியதாவது:மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், 'குரூப் - -1' முதன்மைத் தேர்வு, மொத்தம், 13 மையங்களில், நடந்தது.
இதில், 5,132 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். 2,457 பேர் மட்டுமே பங்கேற்றனர். 2,675 பேர் தேர்வுக்கு வரவில்லை.இத்தேர்வை, நான்கு நடமாடும் குழுக்களும், ஒரு பறக்கும் படை குழு, 15 கண்காணிப்பு அலுவலர்கள், 15 முதன்மை கண்காணிப்பாளர்கள், 16 விடியோ கிராபர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE