'ஹரிகாம்போதியும் தியாகராஜரும்' பகிர்ந்தார் அம்ருதா முரளி!

Added : ஜன 03, 2021
Share
Advertisement
விதுஷி அம்ருதா முரளி, 'ஹரிகாம்போதியும் தியாகராஜரும்' என்பதைப் பற்றி விளக்கி பேசினார். இது குறித்து, அவர் பேசுகையில், எவ்வாறு யாழ் மரபில் பாலையாழ் எனும் வாத்தியம், இந்த ஹரிகாம்போதிக்கு ஏற்ப மெட்டமைக்கப் பட்டிருக்கும் என்றும், அதனின்று உதித்த செம்பாலை, ஹரிகாம்போதியின் ஸ்வரங்களுக்கு நிகராக இருக்கும் எனும் தகவல்களையும், முதலில் கொடுத்தார். தியாகராஜரைப்

விதுஷி அம்ருதா முரளி, 'ஹரிகாம்போதியும் தியாகராஜரும்' என்பதைப் பற்றி விளக்கி பேசினார். இது குறித்து, அவர் பேசுகையில், எவ்வாறு யாழ் மரபில் பாலையாழ் எனும் வாத்தியம், இந்த ஹரிகாம்போதிக்கு ஏற்ப மெட்டமைக்கப் பட்டிருக்கும் என்றும், அதனின்று உதித்த செம்பாலை, ஹரிகாம்போதியின் ஸ்வரங்களுக்கு நிகராக இருக்கும் எனும் தகவல்களையும், முதலில் கொடுத்தார்.

தியாகராஜரைப் பொறுத்தமட்டில் வேங்கடமகியின், 72 மேளகர்த்தா முறையையே பின்பற்றி யுள்ளார். ஹரிகாம்போதி இதில், 28வது மேளம். அவர் தான், இந்த ராகத்தை உயிர்ப்பித்தவர். இதிலுள்ள கீர்த்தனைகள் - ராமநன்னு ப்ரோவரா, தினமணிவம்ச, உண்டேதி ராமுடு, எந்தரானி, எந்துகு நிர்தய, சனிதோடி, வல்லகாதன சீதா, - ஒவ்வொன்றும், தியாகராஜரின் மெட்டுக்களின் வகைமைகள்.இதன் கிளைகளான காம்போதி, கமாஸ் மற்றும் யதுகுலகாம்போதி போன்றவை பாடப்பட்டு வந்த காலத்திலும், ஹரிகாம்போதியைத் தனித்து நிறுத்தி, அதைப் பாடுவதற்கான பாடங்களை நமக்குக் கற்பித்தவர் தியாகராஜரே. 'எந்துகு நிர்தய...' பாடலில், ஐந்து சரணங்களையும், ஒவ்வொரு விதமாக அமைத்திருப்பார்.

அவை ஒவ்வொன்றும், ஒரு கலைஞனை கட்டிப் போட்டு விடும், ஒரு மாயத்தன்மையுடன் விளங்கும்.நேரமின்மையால், உடனே காம்போதிக்கு, 'தாவிச்' சென்ற அம்ருதா, எப்படி, 'ஓ ரங்கசாயி...' பாடலில் உள்ள 'பூலோக வைகுண்டம்...' எனுமிடம், ராகத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது என்றார்.இதே காம்போதியிலிருக்கும், 'ஸ்ரீ ரகுவரப்ரமேய' என்பது ஸ்வர ஸாஹித்யத்துடன் ஒரு ஸ்வரஜதி போலப் பாடும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது எனும் தகவலையும் தெரிவித்தார்.அடுத்து, கமாஸை எடுத்துக் கொண்ட அம்ருதா, 'ஸுஜன ஜீவனா'வும் 'சீதாபதே நாமனஸுன'வும் எப்படி பாடல் எடுத்தவுடனேயே ராகத்தை உணர்த்துகின்றன என்றும், அதேபோல 'ப்ரேம ஜூசி நாபை...' எனும் வரியை, அனைவருமே தப்பாமல் நிரவலுக்காக எடுத்துக் கொள்வார்கள் என்பதையும் சொன்னார்.

யதுகுலகாம்போதி என்று பார்க்கையில், தியாகராஜர் பத்து உருப்படிகளைப் படைத்திருக்கிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்வரத்தில் துவங்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளன. மிகவும் உருக்கமான, 'ஸ்ரீ ராம ஜெயராமா...' எனும் பாடலின் சில வரிகளைப் பாடி, இங்கு தாய் கவுசல்யா, தந்தை தசரதன், குரு விசுவாமித்திரன், தம்பி லக்ஷ்மணன், பெண் கொடுத்த ஜனகன், சிவதனுசு, சாபம் நீங்கிய அகலிகை, இல்லாள் சீதா தேவி முதலானோரும் முடிவில் அடியேனாகிய தியாகராஜனும் என்ன தவம் செய்துள்ளனரோ என்பார்.எதற்கு? உன்னுடன் உறவாடவும் உனக்கு சேவை செய்யவும் என்று பொருள் விளக்கம் சொன்னது நெஞ்சை நிறுத்தியது.

இடையிடையே அம்ருதா. 'சங்கீத கலாநிதிகள்' செம்மங்குடி, ராமநாதன் மற்றும் லால்குடி ஆகியோர் பாடி வாசித்தளித்த ஒலிப்பதிவுகளை, நம்மை கேட்கச் செய்து, இந்த ராகங்களை அவர்கள் எப்படிப் பாடியிருக்கின்றனர் என்பதை உணரச் செய்தார்.ஹரிகாம்போதியிலிருந்து பிறந்த மற்ற ராகங்கள் இவையாகும் என்று தெரிவித்த அம்ருதா, இந்த ராகங்கள் அனைத்திலுமே, தியாகராஜர் பாடல்களை இயற்றியுள்ளார் என்றார்.பெயரளவில் இவற்றைக் குறிப்பிட்டு சென்று விடாமல், ஒவ்வொரு ராகமும் தனக்குக் கொடுத்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார் அம்ருதா.ஒவ்வொரு ராகத்திற்கும், அவற்றின் ஆரோகணத்தையும் அவரோகணத்தையும், அவற்றின் ராகஸ்வரூபம் மனதில் ஓரளவிற்கேனும் குடியேறும்படி பாடிக் காண்பித்து, தான் கற்றவற்றை நம்மிடம் வஞ்சனையில்லாமல் பகிர்ந்து கொண்டார் அம்ருதா முரளி.'நாத இன்பம்' அமைப்பு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X