புதுடில்லி:“இந்தியர்கள் செய்யும் சாதனைகளை நினைத்து, எதிர்க்கட்சிகள் பெருமைப்படுவதே இல்லை,” என, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, கடுமையாக விமர்சித்துள்ளார்.
கொரோனா வைரசுக்கான, 'கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின்' தடுப்பூசிகளுக்கு, அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனினும், காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்த தடுப்பூசிகள் மீது சந்தேகங்களை எழுப்பும் விதமாக, கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.
டுவிட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த, எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்தியர்களை நினைத்து பெருமைப்படுவதே இல்லை.பாராட்டத்தக்க விஷயத்தை இந்தியா செய்யும் போதெல்லாம், அந்த சாதனைகளை கேலி செய்யும் விதமாக, எதிர்க்கட்சிகள், மோசமான கோட்பாடுகளுடன் முன் வருகின்றன. எதிர்ப்பு தெரிவிக்கும்போதெல்லாம், அவர்களின் முகத்திரை கிழிகின்றது.
எனவே, எதிர்க்கட்சிகள், மக்களின் சுகாதார விஷயங்களில் அரசியல் செய்ய வேண்டாம் என, கேட்டுக்கொள்கிறேன். மக்களின் விலைமதிப்பற்ற வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களுடன் விளையாடுவதை, உடனடியாக நிறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE