கோவை:கோவை மாநகராட்சியில் தவறான ஆவணம் தாக்கல் செய்து, கட்டட வரைபட அனுமதி பெற முயற்சித்த குற்றத்துக்காக, பதிவு பெற்ற பொறியாளர்கள் இருவரின் உரிமம் ரத்து செய்யப்பட்டது; ஒருவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.கோவை நகர் பகுதியில், 10 ஆயிரம் சதுரடிக்குள் கட்டடம் கட்ட வேண்டுமெனில், மாநகராட்சிக்கு விண்ணப்பித்து, வரைபட அனுமதி பெற வேண்டும்.
பதிவு பெற்ற பொறியாளர்கள் மூலமாக, 'ஆட்டோ டி.சி.ஆர்.,' எனப்படும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆவணங்கள் சரியாக இணைத்திருந்தால், மாநகராட்சிக்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்படும். ஆவணங்களில் குறைபாடு இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்படும்.சமீபகாலமாக, 2,000 சதுரடிக்குள் கட்டடம் கட்டுவதற்கான வரைபடம், விண்ணப்பித்த சில நாட்களுக்குள் வீடு தேடி வருகிறது. எவ்வளவு பணம் செலுத்த வேண்டுமென, மாநகராட்சி ஊழியர்கள், தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கின்றனர்.இச்சூழலில், காலியிடம் என கூறி, வரைபட அனுமதி கேட்ட ஒரு இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அங்கு கட்டடம் இருந்ததால், அதிர்ச்சி அடைந்தனர். இணைய வழியில் விண்ணப்பிக்காமல், நேரடியாக கையெழுத்துக்கு கோப்பு வந்ததையும் கண்டுபிடித்தனர்.சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர், மொபைல் எண் குறிப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், அனைத்து விண்ணப்பத்திலும், ஒரே பதிவு பெற்ற பொறியாளரின் எண் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தவறான தகவல் சமர்ப்பித்து, அனுமதி பெற முயற்சித்த, பதிவு பெற்ற பொறியாளர் சாந்தி, இணைய வழியில் விண்ணப்பிக்காமல், நேரடியாக கோப்பு சமர்ப்பித்த பொறியாளர் ரமேஷ்குமார் ஆகியோரின் உரிமத்தை ரத்து செய்ய, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.அனைத்து விண்ணப்பத்திலும் ஒரே தொடர்பு எண் வழங்கிய, பதிவு பெற்ற பொறியாளர் வெங்கடாசலத்துக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE