கோவை:கோவையில் இறப்பு விகிதம் கணிசமாக குறைக்கப்பட்டு இருப்பினும், அலட்சியம் காரணமாக இறப்புகள் இன்னும் தொடர்வதாக, எச்சரித்துள்ள கலெக்டர் ராஜாமணி, அறிகுறிகளை உணர்ந்தவுடன் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.கொரோனா பாதிப்பு தற்போது, கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் மூலம், மேலும் கொரோனா பரவாமல் தடுக்க, அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பிரிட்டனில் இருந்த வந்த, 93 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்திருப்பினும், அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கோவையில், தினசரி பாதிப்பும், பலி எண்ணிக்கையும் குறைந்திருந்தாலும், இளைஞர்கள் பலர் அலட்சியமாக நடந்து கொள்வதால், காப்பாற்ற முடியாத பாதிப்புக்கு உள்ளாவதாக எச்சரித்துள்ளார், கோவை கலெக்டர் ராஜாமணி.இதுகுறித்து, அவர் கூறியதாவது:கொரோனா இறப்புகளை குறைக்க, உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆக., மாதத்துடன் ஒப்பிடுகையில், தற்போது தொற்று பாதிப்பு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் முகாம்கள் மூலம், பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அப்பகுதிகளில், உள்ள பிற நோய் பாதிப்பு உள்ளவர்கள், முதியவர்களுக்கு உடனடியாக பரிசோதனை மேற்கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சுகாதாரத்துறை சார்பில், இறப்பு சார்ந்த ஆய்வுகள் வாரம் ஒருமுறை மேற்கொள்ளப்படுகின்றன.
இருப்பினும், தற்சமயம் அறிகுறிகள் இருந்தும் பரிசோதனை மேற்கொள்ளாமல், நான்கு நாட்களுக்கு பின், பாதிப்பு அதிகமானதும் மருத்துவமனைக்கு வருகின்றனர். இது தவறு. இவர்கள் இளைஞர்களாக இருப்பினும் இறக்கும் சூழல் உள்ளது.இதனால், அறிகுறி எதுவாயினும் உடனடியாக தயக்கமின்றி பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சைக்கு ஒத்துழைத்தால், இறப்பை முற்றிலும் குறைக்க இயலும்.முக்கியமாக, கொரோனா தொற்று குறைந்து விட்டதென்று, மக்கள் பலர் மாஸ்க் அணியாமல் அலட்சியமாக நடமாடுகின்றனர். யார் எங்கிருந்து வந்தவர்கள், யாரிடம் தொற்று இருக்கிறதென்று தெரியாது என்பதால், மாஸ்க் அணிவதை தொடர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE