கோவை:உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, கோவை ரயில்வே ஸ்டேஷனில் அவரது உறவினர்கள், கண்ணீர் மல்க வரவேற்றனர்.தொண்டாமுத்துார் அருகே நரசீபுரத்தை சேர்ந்தவர் நாகலட்சுமி, 60. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கோவையில் இருந்து வெளியேறி ரயில் மூலம், ஆந்திரா, கர்நாடகாஎன பல்வேறு மாநிலங்களை கடந்து, உத்தரப்பிரதேசம் சென்றடைந்தார்.அவரது மகள் மங்களச்செல்வி, பல்வேறு இடங்களில் தாயை தேடியுள்ளார். இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலபோலீசார் நாகலட்சுமியின் இருப்பிடம் குறித்து, சில நாட்களுக்கு முன்பு, மொபைல் போன் மூலம், மகள் மங்களச்செல்விக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி அலுவலகத்தை, மங்களச்செல்வி தொடர்பு கொண்டார். கட்சி தலைமைநடவடிக்கையால், உத்தரப்பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட மூதாட்டி, நேற்று காலை கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்தடைந்தார்.மகள் மங்களச்செல்வியை பார்த்த நாகலட்சுமி, ''அம்மா வந்துட்டேன் அழாதே கண்ணு... என்ற பிள்ளைய என்ன மாதிரி வச்சிருந்திருப்பேன் தெரியுமா... நாலு வருசமா பாக்க முடியலை,'' என, கண்ணீர் மல்க கட்டி அணைத்துக்கொண்டார்.கட்சியின் கிழக்கு மாநகர மாவட்ட செயலாளர் தனபால் உள்ளிட்டோர், ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE