திருப்பூர்;ஆரம்ப சுகாதார நிலையங்களில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பிரசவ காலத்தில் தாய் -- சேய் இறப்புகளை தடுக்கவும், சிகிச்சை வசதிகளை விரிவாக்கம் செய்யவும், இங்கு அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
மகப்பேறு நலம், குழந்தைகள் நலம், தர மேலாண்மை என பிரிவுகளின் கீழ், தொழில்நுட்ப வழிகாட்டுதல், பயிற்சி அளித்தல், கண்காணித்தல், தனியார் பங்களிப்பு மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதில், கர்ப்பகால முன், பின் பராமரிப்பு, அவசர கால பிரசவ சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவற்றில் கிராம செவிலியர்கள் தனி கவனம் செலுத்துகின்றனர்.கிராம செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்க, பல்வேறு மாவட்டங்களில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில், கிராம செவிலியர்களுக்கான இம்மையம் அமைக்கப்படாமல் உள்ளது.சுகாதாரத்துறையினர் கூறியதாவது:கிராம செவிலியர்கள், தடுப்பூசி போடுதல், கிராமங்கள் தோறும் சென்று கர்ப்பிணி பெண்களை கண்டறிதல், மகப்பேறு உதவித்தொகை பெற்றுத் தருதல் போன்ற பல்வேறு பணிகளையும் மேற்கொள்கின்றனர். இதற்கென, அவர்களுக்கு அவ்வப் போது பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், கிராமப்புறங்களில், 242 செவிலியர்களும், நகர்புறங்களில், 98 செவிலியர்களும் பணியில் உள்ளனர். இவர்கள், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று மருத்துவ திட்டங்கள் குறித்த பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.இதேநிலை, கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும் காணப்படுகிறது. எனவே, கிராம செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக திருப்பூர் மாவட்டத்திலும் மையம் அமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE