திருப்பூர்:திருப்பூரில், 16.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆயத்த ஆடை பொது பயன்பாட்டு மைய கட்டுமானப்பணிகள் நேற்று துவங்கின. அக்., மாதம், இது பயன்பாட்டுக்கு வருகிறது.திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு, பின்னலாடை துறை வளர்ச்சிக்காக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை இணைத்து, ஆயத்த ஆடை துறை சார்ந்த பல்வேறு பொது பயன்பாட்டு சேவை மையங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
ஆயத்த ஆடை பொது பயன்பாட்டு மையம் அமைப்பதற்காக, ஆடை உற்பத்தி துறையினர் 40 பேர், குழுமமாக இணைந்துள்ளனர். இதற்காக,16.55 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசு ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.மத்திய அரசு 8.55 கோடி; மாநில அரசு, 3 கோடி ரூபாய் மானியம் வழங்குகின்றன. தொழில் குழுமத்தினர், 5 கோடி ரூபாய் முதலீடு செய்கின்றனர்.பொது பயன்பாட்டு மையம் அமைப்பதற்காக, திருப்பூர் - தாராபுரம் ரோடு, பழவஞ்சிபாளையம் ரிங் ரோட்டில், இரண்டு ஏக்கர் நிலம், 16 ஆண்டு, குத்தகைக்கு பெறப்பட்டுள்ளது. அரசு அனுமதி கிடைத்ததையடுத்து, ஆயத்த ஆடை பொது பயன்பாட்டு மைய கட்டுமான பணிகள் நேற்று துவங்கின. சிறப்பு பூஜை நடந்தது.பொது பயன்பாட்டு மைய தலைவர் ராமசாமி, நிர்வாக இயக்குனர் மோகனசுந்தரம், தொழில்பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை உட்பட தொழில் குழுமத்தினர் பங்கேற்றனர்.
நிர்வாக இயக்குனர் மோகனசுந்தரம் கூறிய தாவது:குறு, சிறு, நடுத்தர ஆடை உற்பத்தி நிறுவனங்களை இணைத்து, அப்பேரல் கிளஸ்டர் என்ற பெயரில், பொது பயன்பாட்டு மையம், திருப்பூரில் அமைக்கப்படுகிறது. 50 ஆயிரம் சதுர அடி பரப்பில், மையம் அமைப்பதற்கான, கட்டுமான பணிகள் தற்போது துவங்கியுள்ளன.வரும் அக்., மாதத்துக்குள் பணிகளை முடித்து, பொது பயன்பாட்டு மையத்தை இயக்கத்துக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். இந்த மையத்தில், நவீன டிஜிட்டல் ரோல் பிரின்டிங் மெஷின்; ஓவல் பிரின்டிங் மெஷின்; ரவுண்ட் பிரின்டிங் மெஷின்கள், 5; டிஜிட்டல் செஸ்ட் பிரின்டிங்; சப்ளிமேஷன் பிரின்டிங் மெஷின்கள், 3; எம்ப்ராய் டரி மெஷின்கள்; ரேப்பியர் லேபிள் மெஷின்; ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.
பெரிய நிறுவனங்களுக்கு இணையாக, திருப்பூரில் உள்ள அனைத்து, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும், மதிப்புகூட்டு ஆடைகளை தயாரித்து, உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைகளை கைப்பற்ற, இந்த மையம் கைகொடுக்கும்.திருப்பூர் பின்னலாடை துறை, அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டுவதற்கு, ஆடை உற்பத்தி துறை சார்ந்த பல்வேறுவகை பொது பயன்பாட்டு மையங்களை உருவாக்குவது அவசியமாகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE