மதுரை:'தமிழகத்தில் ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது. என் ஆதரவாளர்கள் உன்னை முதல்வராக விட மாட்டார்கள். கட்சிக்காக உழைத்த நான் என்ன துரோகம் செய்தேன்,'' என மதுரையில் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க.,முன்னாள் மத்தியமைச்சர் அழகிரி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
அவர் பேசியதாவது: 1980ல் மதுரை வந்தேன். முரசொலி நிறுவன பொறுப்பை ஏற்க கூறினார் கருணாநிதி. இங்கு உங்களுடன் ஒருவராக இருக்கிறேன். தென் மாவட்டங்களில் கட்சி, குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறேன். உங்களிடம் இருந்து என்னை பிரிக்க முடியாது. நான் என்ன துரோகம் செய்தேன். ஏழரை ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு சும்மா இருக்கிறேன். எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது கிடையாது. தொண்டன் ஒரு தொண்டனாக தான் இருக்கிறேன்.
நம் கோட்டை
மதுரை எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்ததை நான் நம் கோட்டையாக மாற்றியுள்ளேன். நான் என்றால் நீங்களும் சேர்ந்து தான். பல சோதனைகளை கடந்து வந்துள்ளோம். ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ கருணாநிதியை எதிர்த்து பல துரோகம் செய்தவர். கட்சிக்கு எதிராக
குற்றச்சாட்டுக்களை கூறி 11 மாவட்ட செயலாளர்களுடன் வெளியேறினார். எந்த தொண்டனும் போகவில்லை. அதுதான் நம் பலம். நீங்கள் கட்சியை காப்பாற்றியுள்ளீர்கள். பல தேர்தல்களிலும் எனக்கு ஒத்துழைப்பு தந்துள்ளீர்கள்.
2001 விருதுநகரில் முப்பெரும் விழா நடந்தது. விழாவுக்கு கருணாநிதி செல்ல வேண்டாம் என நான் கூறியதாக அவரிடம் பொய் குற்றச்சாட்டுகளை கூறினார்கள். அதனால் என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள்.அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 2001 மதுரை மாநகராட்சி தேர்தலில் நம் ஆதரவாளர்கள், நம் ஆதரவாளர்களை போட்டியிட செய்வோம் என்றனர்.
அதன்படி 10 பேரை கவுன்சிலருக்கு போட்டியிட வைத்தேன். அதில் ஏழு பேர் வெற்றி பெற்றார்கள். அதை யாரும் மறுக்க முடியாது.
அப்போது அ.தி.மு.க.,வில் கவுன்சிலர்கள் அதிகம் இருந்தார்கள். துணைமேயர் பதவிக்கான தேர்தல் நடந்தது. பழனிவேல்ராஜன் போன்றவர்கள் அழகிரியை கட்சியில் சேர்த்தால்தான் துணை மேயர் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றனர். பிறகு என்னை கட்சியில்
இணைத்தனர். சின்னசாமியை துணை மேயராக நிற்க வைத்து வெற்றி பெற வைத்தேன். அத்தேர்தலில் அ.தி.மு.க.,க்கு 40 கவுன்சிலரும் தி.மு.க.,க்கு. 32 கவுன்சிலர்கள் மட்டுமே
இருந்தார்கள். எனினும் துணை மேயர் தேர்தலில் வெற்றி பெறச் செய்தேன்.
திருமங்கலம் பார்முலா
அதன்பிறகு 2006ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. பழனிவேல்ராஜன் அமைச்சராக பதவி ஏற்று வருவதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க திட்டமிட்டேன். வரும் வழியில் அவர் இறந்து விட்டார். பிறகு மேற்கு தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. எம்.ஜி.ஆர். வெற்றி பெற்ற தொகுதி தி.மு.க., வெற்றி பெறாது என்று கூறினார்கள். நான் காங்.,யை சேர்ந்த வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற செய்தேன்.
எம்.ஜி.ஆர்., பெற்ற ஓட்டுக்களை விட அதிக ஓட்டுவித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச்
செய்தேன். திருமங்கலம் தொகுதிக்கான இடைத்தேர்தல் வந்தது. அத்தொகுதி பற்றி இந்தியா முழுவதும் பேசப்பட்டது. கருணாநிதி, மாறன், ஏன் இப்போது தலைவராக இருக்கும் ஸ்டாலின் உட்பட அனைவருமே என்னை மன்றாடி அங்கு பணியாற்ற கேட்டுக்கொண்டனர் நான் மறுத்தேன்.
கருணாநிதி ஐ.பெரியசாமி மூலம் பல முறை விசாரித்து திரும்பத்திரும்ப மன்றாடிக் கேட்டுக் கொண்டதால் கடைசியாக திருமங்கலம் தேர்தலில் பணியாற்ற ஒப்புக் கொண்டேன். 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெறச் செய்வேன் என்று கூறியபடி 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தேன்.அப்போது தி.மு.க., பார்முலா என்று பேசப்பட்டது. பார்முலா என்றால் நான் பணம் காசு கொடுக்கவில்லை. உழைப்பு தான் அந்த
பார்முலா.
திருவாரூரில் கருணாநிதி பழைய தேர்தலில் பணியாற்றிய விதத்தை சிறுவனாக இருக்கும்போதே பார்த்துள்ளேன் அதன்படி அவருடைய பார்முலாவை பின்பற்றி தான் திருமங்கலத்தில் உழைத்தேன். திருமங்கலம் பார்முலா என்பது கலைஞரின் உழைப்பு தான் அந்த பார்முலா.
இப்படி கட்சி முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட நான் என்ன துரோகம்
செய்தேன்.
திருமங்கலம் தேர்தல் முடிந்த பின்பு என்னை சென்னைக்கு அழைத்தார்கள். பிரம்மாண்ட
வரவேற்பு தருவதாக கூறினார்கள். ஆனால் விமான நிலையத்திற்கு பத்து பேர் மட்டுமே வந்தனர். அப்போதே என்னை அசிங்கப்படுத்த தொடங்கிவிட்டனர். திருமங்கலம் தொகுதியில் வெற்றி பெறாவிட்டால் ஆட்சியைப் பறி போயிருக்கும்.ஆனால் நான் உழைத்து வெற்றியைப் பெற்றுத் தந்த எனக்கு பத்து பேரு வந்து வரவேற்பு கொடுத்தார்கள்.
கருணாநிதி உத்தரவுஎன்பதால் அடிபணிந்து நான் இருந்தேன். பிறகு சென்னைக்கு அழைத்து கருணாநிதி எனக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியைக் கொடுத்தார் நான்
தொண்டனாக இருக்க விரும்புகிறேன் பதவி வேண்டாம் என்று கூறினேன் ஆனால்
அப்போதைய பொதுச்செயலாளர் அன்பழகனும் தலைவரும் சேர்ந்து என்னை
வற்புறுத்தியதால் அந்த பதவியை நான் ஏற்றுக் கண்டேன்.
சதி திட்டங்கள்
நான் கட்சியில் வளர்ச்சி அடைவதை அமுக்க பலர் பல சதித் திட்டங்களை போட்டார்கள். மதிய உணவுக்காக நான் சென்ற போது ஸ்டாலின், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, நேரு போன்ற பலர் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் முன்கூட்டியே பேசி வைத்தது போல் வந்து என்னிடம்உங்கள் தம்பி பொருளாளர் பதவி வாங்கி தர கூறுகிறார் என என்னிடம் கேட்டனர். இதில் எனக்கு என்ன இருக்கிறது தலைவரிடம் கூறினால் கொடுக்க போகிறார் என்று
உடனடியாக போன் போட்டு தலைவரிடம் தம்பிக்கு பொருளாளர் பதவி வேண்டும் என்று கூறினேன் மாலையே இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டது என்னால்தான். ஏன் இந்த பதவியை கேட்கிறார்கள் என்று பார்த்தால் நான் தென் மாவட்ட அமைப்புச் செயலாளராக ஆகிவிட்டதால் பொறாமையில் அவர் பொருளாளர் பதவியை கேட்டுள்ளார்.
இன்னும் ஒரு உண்மையை கூறுகிறேன். திருமங்கலம் தொகுதி தேர்தல் முடிந்த இரவு ஸ்டாலின் அவரது மனைவி, மகன் எல்லோரும் என் வீட்டுக்கு உணவு அருந்த வந்தனர்.
அப்போது ஸ்டாலினை பார்த்து நான் 'அப்பாவுக்கு பிறகு எல்லாமே நீ தான்' என்றேன். கட்சித் தலைமைப் பதவி, முதல்வர் பதவி என அனைத்தும் நீதான் பார்த்துக் கொள்ளவேண்டும்.
உனக்குத்தான் அந்த பதவிகள் என்று கூறினேன்.
இதை என் அப்பா, அம்மா மீது ஆணையிட்டு கூறுகிறேன். இது நான் கூறியது உண்மை.
அவரால் இதை மறுக்க முடியுமா. ஆனால் அப்படி பதவி வாங்கி கொடுத்த எனக்கே அவர்
இப்படிதுரோகம் செய்தால் எப்படி.திருச்செந்தூர் இடைத்தேர்தலில் அனிதா ராதாகிருஷ்ணன்
50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தேன். இது நான் கட்சிக்கு செய்த
துரோகமா. அதன்பிறகு 2009 நடந்த லோக்சபா தேர்தலில் தென் மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்தோம்.
மதுரை தொகுதியில் முதல் முறையாக உதயசூரியன் வெற்றி பெற்றது என்றால் என்னால் தான். நாகர்கோவிலுக்கு ஊழியர் கூட்டத்திற்கு சென்றபோது இதுவரை அங்கு உதயசூரியன் சின்னம் போட்டியிடவில்லை என்று கூறினார்கள். அதை கருணாநிதியிடம் கூறி இரண்டு தொகுதிகளை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைத்து வெற்றி பெற செய்தேன். இது கட்சிக்கு நான் செய்த துரோகமா.
ஸ்டாலினுக்கு பொறாமை:
அதன்பின் நான் மத்திய அமைச்சர் ஆனேன். அறிவாலயத்திற்கு நான் மாலை அணிவிக்க சென்ற போது கருணாநிதி தனியாக பேச வேண்டும் என்று சொன்னதாக என்னிடம் ஸ்டாலின் கூறினார். நான் போய்ப் பார்த்தபோது 'தம்பி துணைப் பொதுச் செயலாளர் பதவியை கேட்கிறான் கொடுக்கலாமா' என்று என்னிடம் கேட்டார் கருணாநிதி. எல்லா உரிமையும் உங்களுக்கு
இருக்கிறது இதில் எனக்கு என்ன இருக்கிறது. நான் எந்த பதவியும் உங்களிடம் கேட்கவில்லை. கொடுப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றேன். அவருக்கு அந்த பதவி
வழங்கப்பட்டது. அதற்கு காரணம் நான் தான். நான் அமைச்சர் பதவியை ஏற்று விட்டதால் பொறாமையில் அந்த பதவியை ஸ்டாலின் கேட்டுள்ளார்.
நான் மத்திய அமைச்சராக இருந்து மக்களுக்காக உழைத்து உள்ளேன். கட்சிக்கு எந்த
துரோகமும் செய்யவில்லை.தொண்டனாக நான் உழைத்தேன். வாழ்கிறேன். அதன்பிறகு
உறுப்பினர் சேர்க்கையில் வாக்காளர் பட்டியலில் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே பதிவு செய்து இவர்களாக கையெழுத்து போட்டு உறுப்பினர் சேர்க்கை செய்தனர். இதை ஆதாரத்துடன் கருணாநிதியிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க கூறினேன். அவர் பார்த்துக் கொள்வார் என்று நான் வந்து விட்டேன். ஆனால் எனக்கு பிறந்த நாளுக்காக பொதுக்குழுவே வருக என போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தனர். இது என்ன தவறு.
இது ஒரு தவறு என்று என்னை கட்சியில் இருந்து நீக்கினர். ஏன் உனக்கு போஸ்டர் அடிக்கவில்லையா. வருங்கால முதல்வரே என்று கருணாநிதி தலைவராக இருக்கும்போது
அடிக்கவில்லையா. நீங்கள் முதல்வர் கனவு காண்பது நடக்கவே நடக்காது. நீங்கள் முதல்வராக வரவே முடியாது. என் ஆதரவாளர்கள் உங்களை வர விட மாட்டார்கள்.
நல்ல முடிவு:
பிறகு எனக்கு எதிராக பல சதிகளை செய்தார்கள். 2011 ல்நான் என் குடும்பத்தினரிடம் சேர்ந்து கருணாநிதியை சந்தித்து கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என கேட்டேன். அவர் இவர்கள் ஆட்டமெல்லாம் அடங்கட்டும் கொஞ்சம் பொறுத்திரு என்றார். ஆனால் அதற்குள் அவர்
படுத்துவிட்டு படுக்கையாகி விட்டார். அவர் படுத்த படுக்கையாக இருக்கும் போதே எனக்கு
எதிராக அவரது பெயரில் பல அறிக்கைகளை தயாரித்து வெளியிட்டனர். பேட்டி கொடுத்தனர். என் மீது பல பழிகளை சுமத்தினர்.
ஏழு ஆண்டுகள் நான் சும்மா இருக்கிறேன். அதன்பிறகு 2016 தேர்தல் நடந்தது. கருணாநிதி தான் நிற்கவில்லை என்று கூறினார். ஆனால் இவர்கள் கட்டாயப்படுத்தி அவரை தேர்தலில் நிற்க வைத்தனர். அவர் பல மேடைகளில் ஏறி பேசினார் .அப்போது அவருடைய பேச்சில் பல
தடுமாற்றங்கள் ஏற்பட்டது. கட்டாய படுத்தி அவரை தேர்தலில் நிற்க வைத்து அவரை பலவீனப்படுத்தி விட்டனர்.
தற்போது பலரும் புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று என்னிடம் கூறினார்கள். எதுவாக இருந்தாலும் நல்ல முடிவாக எடுப்பேன். நல்ல முடிவாக இருந்தாலும் கெட்ட முடிவாக
இருந்தாலும் அதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிதாக கட்சி தொடங்க
வேண்டும் என்கிறீர்கள். தொடங்கலாம் தொடங்காமல் இருக்காலாம். எதுவாக இருந்தாலும் நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய முடிவை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஸ்டாலினை பார்த்து ஒருவர் கருணாநிதியை மிஞ்சி விட்டீர்கள் என்று பேசுகிறார். கருணாநிதியை யாராவது மிஞ்ச முடியுமா. அவருக்கு நிகராக யாராவது இனி பிறக்க முடியுமா. பிறக்கவே முடியாது. கருணாநிதி பெயர் இல்லாமல் கட்சியை
நடத்துகிறார்கள். கருணாநிதியை மறந்துவிட்டார்கள். ஆகையால் அவரை நினைவுபடுத்த வேண்டும். அதை மனதில் வைத்து நீங்கள் செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
அறிவாலயம் நமக்கே சொந்தமானது உரிமை கோரிய அழகிரி ஆதரவாளர்கள்
* மதுரையில் நடந்த அழகிரி ஆதரவாளர்கள் கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 50 ஆயித்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் குவிந்தனர்.
*' 1980 முதல் மதுரையில் முகாமிட்டு தென் மாவட்டங்களில் பல வெற்றிகளை குவித்த அழகிரி எப்போதும் பதவிக்கு ஆசைப்பட்டவர் அல்ல. அவர் பின்னால் ராணுவ கட்டுப்பாட்டுடன்
உள்ளோம்' என பலரும் பேசினர்
*திருவண்ணாமலையை சேர்ந்த நிர்வாகி கந்தசாமி "கட்சியை உடைத்த துரோகிகளை
கட்சிக்குள் சேரத்துள்ளீர்கள். கருணாநிதி மகன் என ஸ்டாலின் அடிக்கடி கூறுகிறார். அழகிரியும் அவர் பிள்ளை தான். அறிவாலயத்துக்கு முதலில் சொந்தக்காரர் அழகிரி தான்" என காட்டமாக கூறினார்.
* கூட்டத்திற்கு மாலை 3:00 மணி முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அவரது
ஆதரவாளர்கள் வரத் தொடங்கினர்.
* மதுரை நகர் மற்றும் மாட்டுத்தாவணி போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் அதை சீர் செய்ய தடுமாறினர்.
* மாவட்டத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் மேடையில் உட்கார வைத்து 5 நிமிடங்கள்
மட்டும் பேச அனுமதிக்கப்பட்டனர்.
*மதுரை சத்யசாய் நகர் வீட்டிலிருந்து மாலை 4:30 மணிக்கு அழகிரி கிளம்பி 6:00 மணிக்கு மேடைக்கு பிரசார வேனில் வந்தார்.
* மேடைக்கு அழகிரி வந்ததும் அனைவரையும் பார்த்து 'அமைதியாக இருந்தால் மட்டுமே நான் பேசுவேன்' என்று அன்புடன் எச்சரித்தார். ஆனாலும் கூட்டம் விசில் அடித்துக் கொண்டும் வாழ்க கோஷம் போட்டுக் கொண்டே இருந்தது.
*மேடையில் அழகிரி பேசும் போது அவரது மகன் தயாநிதி அருகில் நின்று கொண்டிருந்தார். அழகிரியை வரவேற்று தொண்டர்கள் வைத்திருந்த போர்டுகளில் தயாநிதி படமும் இடம்பெற்று இருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE