புதுச்சேரி: ''ஊழல் குறித்து, தி.மு.க., மற்றும் காங்., கட்சிகள் பேசக்கூடாது,'' என, நடிகை குஷ்பு தெரிவித்தார்.
புதுச்சேரியில், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தலைமையில் நடந்த, பா.ஜ., பொதுக் கூட்டத்தில், குஷ்பு பேசியதாவது:உயர் ஜாதிக்கு மட்டும் தான், பா.ஜ., முக்கியத்துவம் அளிக்கிறது என, எதிர்க்கட்சியினர் தவறான பிரசாரம் செய்கின்றனர். கேரளாவில், 21 வயது பெண், சேர்மனாக பதவி ஏற்றது வரவேற்கத்தக்கது.
அதே கேரளாவில், பந்தலம் கிராமத்தில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சுசிலா சுந்தோஷ் என்ற பெண்ணை, பொது தொகுதியில் நிற்க வைத்து, சேர்மனாக்கி அழகு பார்த்துள்ளது, பா.ஜ., கட்சி. இதைப்பற்றி யாரும் பேசுவது கிடையாது. நான், தி.மு.க.,வில் தான், அரசியல் பயணத்தை துவங்கினேன். 'யாரையும் தகாத வார்த்தையால் பேசக்கூடாது, ஜெயலலிதாவை கூட அம்மையார் ஜெயலலிதா என்று தான் பேச வேண்டும்' என, மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி என்னிடம் சொன்னார்.தமிழக முதல்வர், மரியாதையாக, ஸ்டாலினை எதிர்க்கட்சி தலைவர் என அழைக்கிறார். ஆனால், பதிலுக்கு ஸ்டாலின் எடுபிடி முதல்வர் என, பேசுகிறார். ஊழலை பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், காங்., - தி.மு.க., பேசவே கூடாது. உங்கள் நேரம் முடிந்து விட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பா.ஜ., வெற்றிக்கு காத்திருக்கிறது.இவ்வாறு, அவர் பேசினார்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி பேசியதாவது.புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தொடர்ச்சியாக ஒரு பொய்யை கூறி வருகிறார். 'யூனியன் பிரதேசமான புதுச்சேரியை, அண்டை மாநிலத்தோடு இணைத்து விடுவர்' என்கிறார். நான் சார்ந்திருக்கும் ஆட்சியின் சார்பாகவும், மத்திய உள்துறை இணையமைச்சர் என்ற முறையிலும், உங்களுக்கு வாக்குறுதி ஒன்றை அளிக்கிறேன். புதுச்சேரி என்றும், யூனியன் பிரதேசமாகவே தொடரும். பொய் சொல்லும் நாராயணசாமிக்கு, தகுந்த பாடத்தை தேர்தலில் புகட்டுங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE