ஈரோடு:''தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்,'' என, ஈரோடு அருகே நடந்த, மக்கள் கிராம சபை கூட்டத்தில், ஸ்டாலின் பேசினார்.
ஈரோடு அருகே வெள்ளோடு, குமாரவலசு ஊராட்சி வி.மேட்டுப்பாளையத்தில், தி.மு.க., சார்பில், மக்கள் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: கிராம சபை கூட்டத்தை, ௧௦ ஆண்டுகளாக, அ.தி.மு.க., நடத்தவில்லை. வேளாண் சட்டங்களை எதிர்த்து, 38 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
மத்திய அரசு செவி சாய்க்காமல் உள்ளது. மாநில அரசும் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறது.'மினி கிளினிக்' திட்டம், மக்களை ஏமாற்றும் திட்டம். ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே, போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லை. இந்நிலையில், மினி கிளினிக்குகள், மருத்துவ ஊழியர், டாக்டர், நர்ஸ்கள் இல்லாமல், எவ்வாறு செயல்பட முடியும்.இதைத்தான், அரசிடம் கேட்டேன். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ ஊழியர் குறித்து கேட்டால், மினி கிளினிக்கை கை காட்டுகின்றனர். மினி கிளினிக் மருத்துவ ஊழியர் குறித்து கேட்டால், ஆரம்ப சுகாதார நிலையத்தை கை காட்டுகின்றனர். இது, கவுண்டமணி - செந்தில் வாழைப்பழ காமெடியாக உள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். தமிழக கஜானா, 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடனில் உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார். முன்னதாக, வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், அவரது படத்துக்கு மலர் துாவி, ஸ்டாலின் மரியாதை செய்தார்.
வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கரூர் அருகே நடந்த மக்கள் சபை கூட்டத்தில் பங்கேற்றார். ஈரோட்டில் இருந்து வந்த ஸ்டாலினுக்கு, கரூர் மாவட்ட எல்லையான, நொய்யல் பிரிவு சாலையில் வரவேற்பு கொடுக்க, தி.மு.க., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதற்காக க.பரமத்தி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து, தி.மு.க.,வினரை நிர்வாகிகள் நேற்று காலை, 10:00 மணிக்கு வேனில் அழைத்து சென்றனர். மரகதபுரி அருகே சென்ற போது, வேன் கவிழ்ந்தது.இதில், டிரைவர் கோபால், 40; மற்றும் வேனில் பயணம் செய்த, 15 பேர் காயமடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE