துாத்துக்குடி: விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசுகிறார் ஸ்டாலின்,'' என, முதல்வர், பழனிசாமி., பேசினார்.
துாத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டியில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி., வில்லிசேரியில், பருத்தி விவசாயிகளிடம் பேசியதாவது: விவசாயிகளையும், ரவுடியையும் ஒப்பிட்டு, ஸ்டாலின் பேசுவது வேதனை அளிக்கிறது. வயலில் வேலை செய்பவர்களுக்கு தான், விவசாயிகளின் கஷ்டம் தெரியும். விவசாயிகளை கொச்சைப்படுத்தும் விதமாக ஸ்டாலின் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
விவசாயிகளிடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து, வெளிநாட்டுக்கு அனுப்பும் திட்டத்தை எதிர்காலத்தில் செயல்படுத்த உள்ளோம். ஏழை மக்களை காக்க, புதிய திட்டங்களை கொண்டு வரும் அரசு இது. வரும் தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்த, அ.தி.மு.க.,வை வெற்றி பெறச் செய்யுங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.
கோவில்பட்டியில், அ.தி.மு.க., இளைஞர் பாசறை நிர்வாகிகளுடனான சந்திப்பில், முதல்வர் பேசியதாவது: என் 20 வயதில், அ.தி.மு.க.,வில் இணைந்தேன். கொடி கம்பம் நட்டு, என் கிராமத்தில் அரசியலை துவங்கினேன். கொடிக் கம்பம் நட்ட மறுநாளே காணாமல் போனது. அப்போது, எங்கள் பகுதியில் காங்கிரஸ் வலுவாக இருந்தது.என் தந்தை, 'ஊர் பொல்லாப்பு வேண்டாம்' என்றார்.
அதன்பின், என் கல்லுாரி காலத்தில் மீண்டும் கொடி கம்பத்தை நட்டு, அதை பாதுகாத்து இன்று முதல்வராகிஉள்ளேன். அடிப்படையில் இருந்து வளர்ந்து, முதல்வராகியுள்ளேன். கட்சிக்கு விசுவாசமாக உழைத்து, இன்று உயர்ந்துள்ளேன்.அ.தி.மு.க.,வைப் பற்றி பேச அருகதை இல்லாத தலைவர் ஸ்டாலின். அவர் செல்லும் இடமெல்லாம் அவதுாறு, பொய் பேசி வருகிறார்.இவ்வாறு, அவர் பேசினார்.
முதல்வர் பழனிசாமி., துாத்துக்குடி
மாவட்டம், கோவில்பட்டியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு, சுதந்திர
போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளையொட்டி, அவரது
படத்திற்கு மாலை அணிவித்தார்.பின், வில்லிசேரியில் பஞ்சு உற்பத்தி
விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்தார். கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில்
பங்கேற்றார். நடந்து சென்று, பஸ் ஸ்டாண்ட் அருகில், கடையில் டீ
அருந்தினார். தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், கடலை மிட்டாய்
தயாரிப்பாளர்கள், தொழில் வர்த்தக சங்கத்தினரை சந்தித்து, கோரிக்கைகளை
கேட்டார்.
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த திட்டங்குளம் ராணுவ வீரர் கருப்பசாமி
வீட்டிற்கு சென்று, அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
எட்டையபுரத்தில் நெசவாளர்கள், பொதுமக்களை சந்தித்தார். விளாத்திகுளத்தில்
தேர்தல் பிரசாரம் செய்தார். அங்கிருந்து, துாத்துக்குடி சென்று,
விமானத்தில் சென்னை சென்றார்.
நேற்று துாத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம்
தொகுதிகளில் நடக்க இருந்த பிரசாரத்தை ரத்து செய்தார். இன்று காலை, சென்னை
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்கும்
நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிற்பகலில், மீண்டும் துாத்துக்குடி வரும்
முதல்வர், மாலை திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே, முன்னாள்
சபாநாயகர் பி.எச்.பாண்டியன் நினைவு மண்டபத்தை திறந்து வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் பங்கேற்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE