சென்னை: கணினி ஆசிரியர் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து, உயர் நீதிமன்றம் அமைத்த ஆணையம், இன்று முதல் விசாரணையை துவங்குகிறது.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 814 கணினி பயிற்றுனர் என்ற கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முழுதும், ஆன்லைன் வழியில் நடந்தது.அதில், சில தேர்வு மையங்களில், தேர்வர்கள் புத்தகம், மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும், பல தேர்வர்கள் ஒன்றாக பேசி, தேர்வில் விடைகளை எழுதியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தத் தேர்வு குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீதிபதி ஆதிநாதன் தலைமையில், விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.இந்த ஆணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் அமைந்துள்ள, பள்ளி கல்வித் துறையின், புதிய கட்டடத்தில் அலுவலகம் அமைத்துள்ளது. முதல் கட்டமாக, முறைகேடு புகார்கள் குறித்து, உரிய ஆதாரங்கள், புகார்கள் போன்றவற்றை அளிக்க, அவகாசம் அளிக்கப்பட்டது.இந்த அவகாசம், நேற்று முன்தினம் முடிந்தது. இதையடுத்து, இன்று முதல் ஆணையத்துக்கு வந்துள்ள புகார்கள், ஆவணங்கள் தொடர்பான விசாரணை துவங்க உள்ளது. புகார்தாரர்களுக்கு சம்மன் அனுப்பி, அவர்களிடம் நேரில் விசாரிக்கவும், ஆணையம் முடிவு செய்துள்ளது.மேலும், மூன்று மையங்களில் மட்டும் முறைகேடுகள் நடந்ததற்கான, முதற்கட்ட ஆதாரங்கள் உள்ளதால், அந்த மையங்களின் பொறுப்பாளர்கள், கண்காணிப்பாளர்களிடமும், விசாரணை நடத்தப்படும்.
பணி நியமனம் நிறைவு
கணினி ஆசிரியர் போட்டி தேர்வில்,தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த வாரம் அறிவித்தது. அந்த பட்டியலில்உள்ள, 742 பேருக்கு, நேற்று முன்தினம் முதல், இரண்டு நாட்கள் பணி நியமன கவுன்சிலிங் நடந்தது.பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் மேற்பார்வையில், இணை இயக்குனர் நரேஷ் தலைமையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், ஆன்லைன் வழியே கவுன்சிலிங்கை நடத்தினர். இதில், ஆசிரியர் தேர்வு வாரிய பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு, அரசு பள்ளிகளில் காலியான இடங்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில், விருப்பமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE