'மின் இணைப்பு பெறுவதற்கு கட்டட நிறைவுச்சான்று தர வேண்டும் என்பதில், சிறிய வணிகக் கட்டடங்களுக்கு விதிவிலக்கு அளிக்கும் வகையில், விதிமுறைகளில் உள்ளாட்சித் துறை மாற்றம் செய்ய வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அனுமதியற்ற, பாதுகாப்பற்ற விதிமீறல் கட்டடங்கள் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில், 2019ல் தமிழக அரசு, ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளை வெளியிட்டது. இதன்படி, உரிய அதிகார அமைப்பிடம் கட்டட நிறைவுச் சான்று பெறாத கட்டடங்களுக்கு மின்சாரம், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு தரக்கூடாது.இந்த விதிமுறைகளில், 20 (1) விதியின்படி, 12 மீட்டர் உயரம், 8,072 சதுர அடிக்கு உட்பட்ட குடியிருப்பு கட்டடங்களுக்கும், மூன்று வீடுகள் வரையிலான ஒரே கட்டடத்துக்கும் கட்டட நிறைவுச் சான்று தேவையில்லை என்ற விலக்கு தரப்பட்டது. ஆனால், 1,000 சதுர அடியிலான சிறிய வணிக கட்டடத்துக்கும் கட்டட நிறைவுச் சான்று பெறுவது அவசியம்.இதன் அடிப்படையில், கட்டட நிறைவுச் சான்று இருந்தால் மட்டுமே, மின் இணைப்பு வழங்க வேண்டுமென்று மின் வாரியம், கடந்த மே மாதத்தில் சுற்றறிக்கை அனுப்பியது. தமிழகம் முழுதும் அனுமதியற்ற கட்டடங்கள் எக்கச்சக்கமாகக் கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த உத்தரவால், பல கட்டடங்களுக்கு மின் இணைப்பு பெற முடியாத நிலை ஏற்பட்டது.கடந்த அக்டோபரில், இந்த உத்தரவை மின் வாரியம் வாபஸ் பெற்றுக் கொண்டது. ஆனால், வரும், 13ம் தேதி வரை, மின் வாரியத்தின் நடவடிக்கைக்கு, ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சிறிய வணிகக் கட்டடங் களுக்கு, இந்த சான்று பெறுவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துஉள்ளது. ஏனெனில், பெட்டிக்கடை, தற்காலிக சுவர்களால் எழுப்பப்படும் சிறு கட்டடங்களுக்கு கட்டட அனுமதி வாங்க முடியாது.
வணிக மின் இணைப்புக்கு கட்டட நிறைவுச் சான்று பெறுவதில் விலக்கு தரப்படாததால் பூங்கா, தெருவிளக்கு, போர்வெல், டிராபிக் சிக்னல், நீர் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் கிணறு போன்றவற்றுக்கு வணிக மின் இணைப்பு தரவும், இந்த சான்று கேட்கப்படுகிறது.கட்டடமே இல்லாத ஓரிடத்துக்கு, கட்டட நிறைவுச் சான்று கேட்க வேண்டிய கட்டாயத்தில், மின் வாரிய அதிகாரிகள் உள்ளனர். இதற்குத் தீர்வு காண வேண்டும் எனில், ஒருங்கிணைந்த வளர்ச்சி விதிகளில் உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.உள்ளாட்சித் துறையின் கீழுள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தான், இந்த மாற்றத்தைச் செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு முன் இந்த மாற்றத்தைச் செய்வது அவசியம்.
-- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE