பொள்ளாச்சி:விவசாயிகள் விதை பரிசோதனை செய்ய மாதிரி வழங்குவது உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து, விதைச் சான்றளிப்பு துறை வழிகாட்டியுள்ளது.பயிர் சாகுபடியில் அதிக மகசூல் பெற, தரமான விதைகளை பயன்படுத்தவது மிக அவசியம். விதையின் தரத்தை உறுதிப் படுத்திக் கொள்ள, விஞ்ஞானப்பூர்மான ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இதற்ககாக, ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசின் விதைப் பரிசோதனைக் கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன.பொள்ளாச்சி விவசாயிகள், கோவை லாலி ரோட்டில் உள்ள அரசு விதைப் பரிசோதனைக் கூடத்தை அணுகி, விதை மாதிரிகளை கொடுத்து, பரிசோதனை செய்து கொள்ளலாம். இதற்கான வழிமுறைகள் குறித்து, கோவை விதைச் சான்றளிப்புத்துறை உதவி இயக்குனர் (பகுப்பாய்வு) நர்கீஸ் தெரிவித்துள்ளார்.விவசாயிகள், ஆய்வகத்தை நேரடியாக அணுகி, விதை மாதிரிகளை கொடுத்தால், பரிசோதனை செய்து தரப்படும். இதில், விதைகளின் முளைப்பு திறன், இனத்துாய்மை, புறத்துாய்மை, ஈரப்பதம் உள்ளிட்டவற்றை கொண்டு, விதையின் தரத்தை தெரிந்து கொள்ளலாம்.விதை மாதிரி கொடுத்ததில் இருந்து அதிகபட்சமாக, 30 நாட்களுக்குள் பரிசோதனை முடிவு வழங்கப்படும். ஒவ்வொரு வகையான பயிருக்கும், மாதிரி விதையின் அளவு மாறுபடும். பொள்ளாச்சி பகுதியில் அதிகம் சாகுபடி செய்யப்படும் பயிர்களின் அடிப்படையில், விதை மாதிரிகளின் அளவு தெரிவிக்கப்படுகிறது.நிலக்கடலை விதை பரிசோதனை செய்ய, 500 கிராம் மாதிரி விதை கொடுக்க வேண்டும். அதே போல், சோளம், 100 கிராம்; மக்காச்சோளம், 500 கிராம்; பனிக்கடலை, 400 கிராம்; தட்டைப்பயறு, 150 கிராம் மாதிரி விதை கொடுக்க வேண்டும்.காய்கறிகளில், வெண்டை, 100 கிராம்; பாகற்காய், 250 கிராம்; சுரைக்காய், 150 கிராம் அளவுக்கு மாதிரி கொடுக்க வேண்டும். மிளகாய், கத்தரி, தக்காளி விதைகள் தலா, 10 கிராம்; தர்பூசணி, பூசணி, வெள்ளரி, அரசாணி விதைகள் தலா, 100 கிராம் மாதிரி கொடுக்க வேண்டும். இதற்கு, 30 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறப்படுகிறது.மேலும் விபரங்களுக்கு, 0422 2981530 என்ற எண்ணில் ஆய்வகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE