'அவரை, எப்படியாவது சமாளித்து, கட்சியில் தக்க வைத்திருக்க வேண்டும்... இப்போது நமக்கு குடைச்சல் தருகிறார்' என, சமீபத்தில், பா.ஜ.,வுக்கு தாவிய, முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியைப் பற்றி, கவலையுடன் பேசுகின்றனர்,திரிணமுல் காங்., கட்சியினர்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. 'இந்த தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து, மம்தாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்ற முனைப்புடன் உள்ளனர், பா.ஜ., வினர். திரிணமுல் காங்கிரசில் அதிருப்தியில் உள்ள தலைவர்களை, தங்கள் கட்சிக்கு இழுக்கும் வேலையில், தீவிரம் காட்டி வருகின்றனர்.
மம்தாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவரும், மாநில போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவருமான சுவேந்து அதிகாரி, கடந்த சில மாதங்களாகவே, கட்சி மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருந்தார். சமீபத்தில், பா.ஜ.,வுக்கு தாவிய அவர், திரிணமுல் கட்சியில் உள்ள, தன் ஆதரவாளர்களை, பா.ஜ.,வில் இணைத்ததுடன், கட்சியின் மற்ற தலைவர்களுடனும் ரகசிய பேச்சு நடத்தி வருகிறார்.
'தேர்தல் தேதி அறிவிப்பதற்குள், மம்தாவை தவிர, திரிணமுல் கட்சியின் மற்ற அனைவரையும், பா.ஜ.,வுக்கு இழுத்து வந்து விடுவேன். மம்தாவின் கூடாரம், விரைவில் காலியாகும்' என, சபதம் செய்துள்ளார் சுவேந்து அதிகாரி. அவரது சபதத்தால், திரிணமுல் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE