ஆனைமலை;பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, பொன்னாலம்மன்துறை பகுதிகளில், தடுப்பணைகளில் போலீசார் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர்.பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப், ஆழியாறு பூங்கா, குரங்கு அருவி உட்பட சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணிகள் வர, அரசு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.சுற்றுலா வரும் பலரும், ஆழியாறு, ஆனைமலை, பொன்னாலம்மன்துறை தடுப்பணைகளில், ஆபத்து தெரியாமல், அத்துமீறி, குளிக்கின்றனர். இதனால், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.இதை தடுக்க தற்போது, போலீசார் தடுப்பணை பகுதிகளில், வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில், கண்காணிப்பு செய்து வருகின்றனர்.சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்த, பொன்னாலம்மன்துறை அருகே, சோதனைச்சாவடி அமைத்தும், ஆழியாறு, ஆனைமலை தடுப்பணைகளில், கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். அத்துமீறி குளிப்போர் மீது அபராதம் விதித்து வருகின்றனர்.இதனால், தடுப்பணைகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் கூட்டம், பெருமளவு குறைந்துள்ளது. 'தடுப்பணைகளில் குளிக்க தடை' என, வெறும் அறிவிப்பு பலகை பொருத்தியதோடு நிறுத்தாமல், தங்கள் பொறுப்பு அறிந்து, பொதுப்பணித்துறையினரும், தடுப்பணை பகுதிகளில் போலீசாருடன் இணைந்து கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE