உடுமலை:திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், குப்பைக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான பணிகள் உடுமலை ஒன்றியத்தில் துவங்கியுள்ளது.உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டபணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளில், குப்பைக்கழிவுகளிலிருந்து உரம் தயாரிப்பது முதன்மையாக உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஊராட்சியிலும், குடியிருப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில், துாய்மைக்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். ஊராட்சிகளில், உரம் தயாரிப்பது மற்றும் குப்பைக்கழிவுகளை தரம் பிரிப்பதற்கான குடில் ஒன்றும் அமைக்கப்பட்டது.துாய்மைக்காவலர்கள், குப்பைக்கழிவுகளை சேகரித்து மக்கும் மற்றும் மக்காத வகைகளை பிரிக்க வேண்டும். இதில், மக்கும் கழிவுகளை உரமாக்குவதற்கு உரக்குழிகள் அமைத்து, அதில், சேகரிப்பதும் திட்டத்தின் செயல்பாடாகும். ஆனால், பெரும்பான்மையான ஊராட்சிகளில், கழிவுகளை தரம்பிரிக்கும் பணிகள் முறையாக நடக்கவில்லை. பொதுமக்களும் விழிப்புணர்வு இல்லாமல், கழிவுகளை ஒன்றாகவே கொட்டுகின்றனர்.சில பகுதிகளில் கழிவுகளை, நீர் ஆதாரங்களுக்கு அருகில் தீ வைத்து எரிப்பதும் தொடர்ந்து நடக்கிறது. தற்போது, திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், குப்பைக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: முதற்கட்டமாக, மூன்று ஊராட்சிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெரியகோட்டை, கணக்கம்பாளையம், போடிபட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில், குப்பைக்கழிவுகளை, மறுசுழற்சி செய்து தரம் பிரிப்பதற்கான குடில் அமைக்கப்படுகிறது.இதில் கூடுதலாக, கழிவுகளை தரம் பிரிக்கும் இயந்திரம் பொருத்தப்படுகிறது. இதன் வழியாக, கழிவுகள், மக்குவது தனியாகவும், பிளாஸ்டிக் போன்ற மக்காத கழிவுகள் பிரிந்தும் வருகிறது.மக்குவதை உரமாக்கி, விற்பனைக்கும், மக்காத கழிவுகளை, ரோடு போடுவதற்கு பயன்படுத்தவும், திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுப்பணிகள் துவங்கியுள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE