உடுமலை:அரசின் ஒத்துழைப்பு இல்லாமல், வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வழியில்லாத நிலைக்கு, தடுக்கு பின்னும் தொழிலாளிகள் தள்ளப்பட்டுள்ளனர்.உடுமலை, ஜல்லிபட்டி, தினைக்குளம் பகுதியில், ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தென்னை ஓலைகளில், தடுக்கு பின்னி, விற்பனை செய்வது மட்டுமே கைத்தொழிலாக கொண்டுள்ளனர்.அன்றாடம் விற்கும் தடுக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், அவர்களுக்கான வருமானம் கிடைக்கிறது. தோப்பு உரிமையாளர்களிடமிருந்து, 200 முதல் 300 ரூபாய் கொடுத்து, நுாறு ஓலைகள் கணக்கில் பெறுகின்றனர்.அவற்றை எடுத்துவர, 400 முதல் 500 முதல் ரூபாய் செலவிடுகின்றனர். ஒரு 'செட்டில்,' 25 தடுக்குகள், நுாறு ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்கின்றனர். பெரும்பான்மையான குடும்பங்களில், பெற்றோர் இருவருக்கும் தடுக்கு பின்னுவது மட்டுமே தொழிலாக இருக்கிறது. ஒரு நாளுக்கு குறைந்தபட்சம், 75 தடுக்குகள் பின்னுகின்றனர். இத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில், அரசின் சார்பில் எந்த உதவியும் வழங்கப்படாததால், தடுக்கு பின்னுவோர் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வழியில்லாமல் உள்ளனர். கோடை காலத்தில், பலரும் அதிகமாக தடுக்குகள் பெற்றுச்செல்கின்றனர். சில நாட்கள் அதிக வருமானம் இருந்தாலும், பல நாட்கள் ஓலைகளை எடுத்து வருவதற்கும் போக்குவரத்து செலவினத்துக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலையும் உள்ளது.வழக்கமாக, கார்த்திகை, தை, மார்கழி மாதங்களில், தடுக்குகளின் விற்பனை அதிகம் இருப்பதில்லை. அரசின் ஒத்துழைப்பும் கிடைப்பதில்லை. நிலையில்லாத வருமானமாக இருப்பதால், பலரும் இந்த தொழிலை கைவிட்டு, தினசரி ஊதியத்துக்கு சென்று விட்டனர். இன்னும் பல குடும்பங்களுக்கு இது மட்டுமே தொழிலாக இருப்பதால், அரசின் உதவியை எதிர்பார்த்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE