அமைச்சரவை பட்டியல் தயார்!'
அரசியலுக்கு வரவில்லை' என்ற ரஜினியின் அறிவிப்பு, தி.மு.க.,வை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேர்தல் வெற்றிக்குப் பின் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, தற்போதே திட்டங்களை தீட்ட துவங்கி விட்டனர், அந்த கட்சியின் மூத்த தலைவர்கள். யார் யார் அமைச்சராக வேண்டும் என்பது குறித்த பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், எம்.பி.,க்கள் இருவரது பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எம்.பி.,யாக இருப்பதை விட, தமிழக அமைச்சர் பதவியில் இருப்பது, தங்களுக்கு அதிக பலனைத் தரும் என, அவர்கள் நினைக்கின்றனர். இதனால், சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு, இவர்கள் தயாராகி வருகின்றனர். வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் போது, இந்த, எம்.பி.,க்கள் யார் என்பது தெரிய வரும். கடந்த லோக்சபா தேர்தலின்போது, மத்திய அமைச்சர்கள் பட்டியலை, ராகுலும் தயாரித்திருந்தார். அதில், தி.மு.க.,வைச் சேர்ந்த சிலருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானதும், அந்த பட்டியல், குப்பைத் தொட்டிக்குத் தான் போனது.
திட்டத்தை மாற்றும் பா.ஜ.,
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்கவில்லை என்ற அறிவிப்பு, பா.ஜ., வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது. தி.மு.க., குடும்ப நெருக்கடி காரணமாகவே, ரஜினி இந்த முடிவை எடுத்ததாக, டில்லியில் பேசப்படுகிறது. ரஜினியின் அறிவிப்பு வரும் முன்பே, தமிழக அரசிடமிருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு செய்தி வந்துவிட்டதாம். 'ரஜினி அரசியலுக்கு நிச்சயம் வரமாட்டார்' என, போனில் சொல்லப்பட்டதாம்.இதையடுத்து, தமிழக சட்டசபை தேர்தலுக்கான வியூகத்தை மாற்றுவது குறித்து, அமித் ஷாவும், பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவும், தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 'பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியை பலப்படுத்துவதே, சரியான முடிவு' என, இவர்கள் கருதுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, ரஜினியின் உடல்நிலை குறித்து, பா.ஜ., தரப்பில் யாரும் விசாரிக்காதது, ரஜினி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சவுரவ் கங்குலி வருவாரா?
மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான தேதி வெளியாவதற்குள், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை, பா.ஜ.,வுக்கு இழுக்க, கட்சி மேலிடம் திட்டமிட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை, மேற்கு வங்க மாநில, பா.ஜ., தலைவர்கள் தீவிரமாக செய்து வந்தனர். நவம்பரில், பிரதமர் துவக்கி வைத்த நவராத்திரி நிகழ்ச்சியில், கங்குலியின் மனைவி டோனாவின் நடன நிகழ்ச்சியும் நடந்தது.இதற்கு கங்குலி வந்திருந்தார். அப்போது, அவரை பா.ஜ.,வுக்கு இழுப்பது தொடர்பாக பேசப்பட்டது. ஆனாலும், கங்குலி பிடி கொடுக்காமல் நழுவி வருகிறார். இந்நிலையில் தான், நேற்று முன்தினம் நெஞ்சு வலி காரணமாக, கங்குலி, கோல்கட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 'இதனால் கங்குலி, அரசியலுக்கு வருவது சந்தேகம்தான்' என, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
நெருக்கடியில் அமரீந்தர்
தன் வினை தன்னைச் சுடும் என்ற நிலைக்கு ஆளாகியுள்ளார், பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங். டில்லி எல்லையில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை துாண்டி விட்டதே, அமரீந்தர் தான் என, பா.ஜ., தரப்பில் நம்பப்படுகிறது. இந்நிலையில், விவசாயிகள் பலர், பஞ்சாபில் உள்ள மொபைல் போன் டவர்களை தகர்த்து விட்டனர். 1,000க்கும் அதிகமான டவர்கள் இப்போது செயல்பட முடியாமல் இருப்பதால், போன் சேவைகள் முடங்கியுள்ளன. இந்த டவர்கள் அனைத்தும், 'ரிலையன்ஸ் ஜியோ'விற்கு சொந்தமானவை. 'விவசாயிகள் தொடர்பான சட்டங்களால் ரிலையன்ஸ் நிறுவனங்கள் பயன்பெறும்' என்ற வதந்தியால் தான், விவசாயிகள், அவற்றை உடைத்து நொறுக்கினர். 'டவர்களை சேதப்படுத்த வேண்டாம்' என, அமரீந்தர் வேண்டுகோள் விடுத்தும், விவசாயிகள் கேட்பதாக இல்லை. பஞ்சாபில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதால், கடும் கவலையில் ஆழ்ந்துள்ளார் அமரீந்தர் சிங்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE