பெ.நா.பாளையம்:ஆனைகட்டி அரசு பழங்குடியினர் நல உண்டு, உறைவிட உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதையொட்டி, அங்கு பிளஸ் 1 மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், ஆனைகட்டியில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், பழங்குடியினர் உண்டு, உறைவிட உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 213 மாணவ, மாணவியர் படிக்கும் இப்பள்ளியில் 11 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
இங்கு படித்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ் 1 வகுப்பில் சேர, கோவை அல்லது சின்னதடாகம் செல்ல வேண்டும். இந்த சிரமம் கருதி, ஆனைகட்டி வட்டாரத்தில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர், அதோடு படிப்பை கைவிடும் அவலம் பல ஆண்டுகளாக நீடித்து வந்தது.
இதற்கு தீர்வாக, ஆனைகட்டி அரசு உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என, பொதுமக்கள் கோரி வந்தனர். அதை ஏற்ற தமிழக அரசு, கடந்த ஆக., மாதம், பள்ளியை, மேல்நிலைக்கு தரம் உயர்த்தி உத்தரவிட்டது.மேல்நிலை வகுப்புக்கு ஆசிரியர் நியமிக்கவும், ஆய்வகங்கள் அமைக்கவும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்று உட்பட காரணங்களை காட்டி, ஆதிதிராவிடர் நலத்துறை, நடப்பாண்டு, பிளஸ் 1 சேர்க்கையை ஒத்தி வைத்தது. ஆனால், நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டுமென பொதுமக்கள், அரசை வலியுறுத்தி வந்தனர்.
அதன் பயனாக, தற்போது இரண்டு பாடப்பிரிவுகளை அடிப்படையாய் கொண்டு, பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கையை ஆனைகட்டி பழங்குடியினர் அரசு உயர்நிலைப்பள்ளி துவக்கி உள்ளது. பாடப்பிரிவு ஒன்றில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியல், உயிரியல் பாடங்களும், பாடப்பிரிவு இரண்டில் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், கலைப்பிரிவு வகுப்பும் தொடங்கப்பட வேண்டும் என்று, மாணவ, மாணவியர், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
பள்ளி தலைமையாசிரியர் பாலச்சந்தர் கூறுகையில், ''கல்வித்துறை இயக்குனரகம் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் பிளஸ் 1 சேர்க்கை இந்தாண்டு துவங்குகிறது. சின்னதடாகம் பள்ளியில் சேர்ந்திருக்கும் மாணவர்களையும் இங்கு சேர்த்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறோம். கல்வியாண்டில், மீதமுள்ள குறைந்த நாட்களில் பாடத்திட்டத்தை பயிற்றுவிப்பது குறித்து, அரசு வழங்கும் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படும். தேர்வும் அதன் அடிப்படையில் தான் இருக்கும். ஆனைகட்டி சுற்று வட்டார மாணவ, மாணவியர், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE