உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
எஸ்.மணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'அரசியல் கட்சி துவக்கி, தமிழகத்தில் கெட்டுப் போயிருக்கும் சிஸ்டத்தை மாற்றுவேன்' எனக் கூறிய நடிகர் ரஜினி, திடீரென, தன் உடல் நிலையை காரணம் காட்டி, 'என்னை மன்னியுங்கள்... அரசியல் கட்சி துவங்கப் போவதில்லை' என, 'ஜகா' வாங்கியுள்ளார்.
அவர், பின்வாங்கியதற்கு பல்வேறு காரணங்ளை, பல தரப்பினரும் கூறி வருகின்றனர். நாம் அனுமானித்த வகையில், ரஜினி ஜகா வாங்கியதற்கு முக்கிய காரணமே, நடிகர் கமலாகத் தான் இருக்க வேண்டும்.ரஜினி, அரசியல் கட்சி துவங்குவதாக அறிவிக்கும் முன், கமல், மக்கள் நீதி மையம் என்ற கட்சியை துவக்கி விட்டார். அரசியலில் இறங்குவது குறித்து, இருவரும் ஆலோசித்து உள்ளனர்.
இதையடுத்து, கட்சி துவக்குவதாக அறிவித்திருந்த ரஜினி, 'நான், முதல்வர் இருக்கையில் அமர மாட்டேன்; நிர்வாகத் திறமையுள்ள ஒரு நேர்மையாளரைத் தான், அப்பதவியில் அமர்த்துவேன்' எனக் கூறி இருந்தார்.இந்த வாக்குமூலத்தை, கமல் வசதியாக பிடித்துக் கொண்டார். 'வாருங்கள் ரஜினி. நாம் இருவரும் இணைந்து கூட்டணி அமைத்து, தேர்தலில் போட்டியிடலாம்' என, ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.கமலின் இந்தக் கோரிக்கையை கேட்டு, பிறரை விட, ரஜினி தான் அதிர்ச்சி அடைந்தார்.
அடடா! கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கலாம் என்று கோரிக்கை விடுக்கும் கமல், வெற்றி வாகை சூடி விட்டால், அவர் தான், முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்பார்.அது, நம் கொள்கைக்கு சரிவராது. கமலின் கோரிக்கையை நிராகரிக்கவும் முடியாது. கட்சித் துவங்கினால் தானே, இந்த சங்கடம்... பேசாமல், ஜகா வாங்கி விடுவோம் என, ரஜினி அரசியலில் குதிப்பதில்லை என, அறிவித்து விட்டார்.இப்படி நாம் கூறுவதற்கு காரணம், அடுத்த முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கும் ஸ்டாலின் உட்பட, பல அரசியல்வாதிகள், நோய் நொடியுடன் தான் உலவிக் கொண்டிருக்கின்றனர்.

ரஜினிக்கு நேற்றோ, அதற்கு முன்தினமோ உடல் நலம் பாதிக்கப்படவில்லை. 2011 முதலே, உடல் உபாதைகளோடு போராடி வருகிறார்; அதற்குரிய சிகிச்சையும் பெற்று வருகிறார்.உடல் நலன் தான் முக்கிய காரணமென்றால், அதை, 2011ம் ஆண்டிலேயே வெளிப்படையாகத் தெரிவித்து, அரசியல் கட்சி துவக்கும் ஆலோசனையில் இருந்து விலகி இருக்கலாமே; அப்படி செய்யவில்லையே!'என்னுயிர் போனாலும் பராவாயில்லை; அரசியலில் குதிப்பது உறுதி' என, கடந்த மாதம் கூட, வீர வசனம் பேசினாரே!ஆக, நடிகர் ரஜினி அரசியல் கட்சி துவக்காமல், உடல் நலனை காரணம் காட்டி, மன்னிப்பு கோரி இருப்பதற்கு முக்கிய காரணமே, நாத்திகரான கமல் தான்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE